சுட சுட செய்திகள்

Friday, April 20, 2012

நம் மதியே நிம்மதி



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனகோர் இடம் வேண்டும்..அங்கே.....இந்த
பாடலை பாடாத அல்லது கேட்காத   தமிழர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு இந்த பாடல் ரொம்ப பிரசித்தம். காரணம் என்ன? எல்லோருக்கும்
பிரச்சனை ..ஒளிந்து கொள்ள ஒரு இடம் வேண்டும் ..அதனால் தான்.

 உண்மையில் நிம்மதி எங்கே கிடைக்கும்? அமைதியான மண்டபத்தில்? ஆள் அரவமற்ற
காட்டில்? இந்த பிரபஞ்சத்தில்? எங்காவது ஒரு இடத்தில் இருக்குமா? கொஞ்சம்
சிரமந்தான். இல்லையா?

பிரச்சனைகளும், கவலையும் நிம்மதியை துண்டாடிவிடுகிறது.
வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.
ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை.

மகாபாரதத்தில், பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்;  ராமாயணத்தில்
ராமனும் வனவாசம் சென்றான்.தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.
கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.
யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு
உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு.
ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை.
பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத
குடும்பங்களில் பிரச்சனை.
அப்படிஎன்றால் யாருக்குமே அமைதியான , சந்தோசமான வாழ்க்கை இருந்ததாக தெரியவில்லை.

நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.
பணக்காரனாலும் சரி , ஏழையானாலும் சரி  வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு
காலத்தில் கண்டிப்பாக நாய் படும் பாட்டை பட்டே ஆக வேண்டும் என்பது
எல்லோருக்குமான விதி. ஆனால் ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது
தெரியாதவனுக்கு கடுகு மலையளவு என்பது போல் அதை சமாளிக்கும் சூத்திரத்தை
அறிந்தவன் தான் சாதனையாளனாகிறான்.

ஒரு சின்ன கதை ..
முருகனுக்கு பெரும் பணம் இருந் தது. அவனு டைய அப்பா சொத்து,
சுகத்தைல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை.
ஆனால், என்ன செய்வது? அவனுக்கு வாய்த்தவள் சரியில்லை.  இதனால்,
முருகனுக்கு நிம்மதி போய்விட்டது. ஒருநாள், அவனைப் பார்க்க அவனது
தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான்.
எனக்கு நிம்மதியே இல்லை, என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக
தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார்
பெரியவர். "முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்!
அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால்,
உனக்கு எந்தத்துன்பமும் இல்லை", என்றார். முருகனுக்கு ஏக மகிழ்ச்சி!
உடனடியாக அவருடன் கிளம்பி விட்டான். அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு
அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், இங்கு ஏன் என்னை
அழைத்து வந்தீர்கள்? என்றான். நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில்
மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்கு உள்ள கல்லறைகளுக்குள்
தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக்
கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து
நிற்பவனை நிம்மதி தேடி வரும். இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து
நிம்மதியைத் தேடப் போகிறாயா... இல்லை, இங்கே தோண்டப்பட்டு உள்ள
குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா? என்றார். முருகனுக்கு புத்தி
வந்தது. உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என
நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள்.
பிரச்னைகளை கண்டு ஓடக்கூடாது. நம்  மனைவிக்கும் புத்தி சொல்வோம்,
கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும், என
விட்டுவிட்டான். பிறகு அவன் நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்.

இந்த கதையில் ஒரு முக்கியமான கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்
புத்தி சொல்லும் முன்னும் அவனுக்கு பிரச்னை இருந்தது. அதற்கு பிறகும்
அவனுக்கு பிரச்னை இருக்கத்தான் போகிறது. அப்படியானால் நிம்மதி எப்படி
அவனுக்கு கிடைத்தது? மனம் பிரச்சனையை வேறு விதமாக ஏற்றுக்கொண்டதின்
விளைவுதான் அதற்கு காரணம்.

நம் மனம் தான் எல்லா பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல மன நிம்மதிக்கும் காரணம்.
 மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது.
அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது.
மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது.இப்படி பல
நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது.

மாறுதல் மனதின் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி
கிடைக்கிறது. இல்லையானால் மன உளைச்சல் தான்.

`இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது’ என்று சில சமயங்களில்
சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம்.
காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே
பொருள். உலகத்தில் எது தவிர்க்க முடியாதது? பிறந்த வயிற்றையும் உடன்
பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும்
மாற்றத்திற்குரியதே.  ஜனனத்தையும், மரணத்தையும் தவிர அனைத்துமே
மறுபரிசீலனைக்குரியவை.  மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம். நண்பர்களை
மாற்றலாம், தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம். மாறுதலுக்குரிய
உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

மனது நம்முடையது  நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். நமக்கு
முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் முழுவதும் அமைதியாக
இருந்து செத்தவர்களல்ல. இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு
உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.

எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனத்தை எளிமையாக
வைத்திருங்கள். கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள். நம்பிக்கை! அதுவே
மனிதனின் அஸ்திவாரம்!! எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுங்கள்!  ஆனால்
எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனைகளில் உங்கள் நிம்மதியை நீங்களே
குறைத்திட வேண்டாம். நம்பிக்கையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் வாழப்பழகுங்கள்
நிம்மதி உங்களைத்தேடி வரும்!!!
எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?’ என்று தேடினால்
நீங்கள் காணமாட்டீர்கள். அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக
நிற்கிறது.  ஆமாம்.  நிம்மதி அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது!
நாம்  இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே நமக்காக நம் தாயின்
இரு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நாம்  பிறந்த
பின்னும்நமக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து
வைத்திருக்கக்கூடும்.

No comments: