சுட சுட செய்திகள்

Sunday, July 17, 2011

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...



“பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் அறிந்து பெண்ணை எடு”

என்பது நம்மிடையே அடிக்கடி பேசப்படும் பழமொழி.

பிச்சை போடும் போது பாத்திரத்தைப் பார்க்க முடியுமா? அதற்கேற்ப பிச்சை தரத்தான் இயலுமா? தகரம், அலுமனியம், எவர்சில்வர் என்று வேறுபாடுகாட்டி ஈந்திடத்தான் முடியுமா?

அதுவல்ல தாத்பரியம். “பாத்திரம்” என்பது பிச்சை எடுப்பவராகிய பாத்திரம். அவருடைய தன்மை அதற்கேற்ப தருதல்.

தமிழில் “ஈ, தா, கொடு” என்று ஊன்று சொற்கள் உள்ளன. மூன்றுமே ஒர பொருள் தான் எனினும் சிறிய வேறுபாடு அவற்றிடையே உண்டு. இழிந்தார்க்கு ஈதல்; சமமானவர்களுக்குத் தருதல்; உயர்ந்தவர்க்கு கொடுத்தல்.

“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது திருக்குறள்.

வந்திருப்பவர்க்கு ஏற்ப வழங்குல் வேண்டும் என்பது தான் பழமொழியின் உட்குறிப்பு.

“கோத்திரம் அறிந்து பெண்ணை எடு” என்பதும் “தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டுவதில்லை” என்பதும் ஒரு பொருளையே தரக்கூடியன.

கைகேயி பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. “இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வரத்தைக்கேட்கிறாய். அது நிறைவேறினால் உன் மங்கல நாணைத்தான் பரதனுக்கு பட்டாபிஷேகக் கங்கனக் கயிறாக் கட்ட வேண்டும்.” என்று தசரதன் சொல்லியும் கேட்காமல் வரத்தை வற்புறுத்தினாள். “மகன் பரதன் ஆளவேண்டும், இராமன் வனவாசம் செல்லவேண்டும்”என்கிறாள் கைகேயி.

இந்தப் பிடிவாளதம் தாய்வழிவந்தது. இதற்கொரு கதை கைகேயியின் தந்தை ஈ, எறும்பு முதல் அனைத்து ஜீவ ராசிகளின் மொழி தெரிந்தவன் அவை பேசுவதை இவன் புரிந்துகொள்ள முடியும். அந்த வித்தையைக் கற்று வைத்திருந்தான்.

அவனும் க்கையேயின் தாயாகிய அரசியும் அந்தப்புரத்தனிமையில் இருக்கும்போது, எதிர் எதர் வந்த இரு எறும்புகள் பேசிக் கொள்வதைக் கேட்டுச் சிரித்தான்.

சிரிப்புக்குக் காரணம் கேட்டாள் அரசி. மன்னனோ அதைச் சொல்ல மறுத்தான். “சொல்லக்கூடாது. மீறி அவற்றின்பேச்சை யாராடமாவது கூறினால் மரணம் ஏற்படும் என்று இந்தக்கலையைக் கற்பித்த குரு சொல்லியிருக்கிறார்” என்றும் சொன்னான்.

அரசியோ, சொல்லியே ஆக வேண்டும் என்றும் அரசன் செத்தாலும பரவாயில்லை என்றும் கூறிப் பிடிவாதம் பிடித்தாள். தான் இறந்தாலும் கவலைப்படாத மனைவியோடு கூடி வாழ்வது பயனில்லாத ஒன்று என்று கருதிய மன்னன் அரசிய அடித்து விரட்டினான். இப்படிக் கூறுகிறது அந்தக் கதை.

இதன் மூலம் தாயின் பிடிவாதம் கணவனைப் பொருட்படுத்தாத தன்மையும் கைகேயியிடம் அமைந்திருந்தது. என்று அறிகிறோம். இதைத்தான் கோத்திரமறிந்து பெண்ணெடுக்கக் கூறும் பழமழியும் தெரிவிக்கிறது.

வாழ்வில் இதை அன்றாடம் சந்திக்கிறோம்.

திருக்குறள் நெறியில் வாழவிரும்பும் என்னை ஒருநாள் ஒருவர் காரணமின்றி அடித்துவிட்டார். அதோடு நில்லாமல் “போடா பொறுக்கி” என்று திட்டியும் தீர்த்து விட்டார். பகல் முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பிரச்சனைக்குத் திருவள்ளுவர் சொல்லும் தீர்வுதான் என்ன? என்று எண்ணியபோது.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்’

என்ற திருக்குறள்தான் நினைவு வந்தது. அப்படியே நடப்போம் என்று முடிவெடுத்தேன். அன்று மாலையில் கடை வீதிக்குச் சென்றபோது, என்னை அடித்தவரை வேறொருவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கியபடி வாய்க்கு வந்தவாறு திட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே மனம் சந்தோஷப்பட்டாலும், தீமை செய்தவர் இப்போது அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறார். இந்த நேரத்தில், குறள்நெறிப்படி தீமை செய்தவர்க்கு நன்மை செய்து தண்டித்தால், தீமை செய்தவர் நானித் தலைகுனிவார் என்று எண்ணி, என்னை அடித்தவர்க்கு உதவ முற்பட்டேன்.

துண்டைக் கழுத்தில்போட்டு முறுக்கிக் கொண்டிருந்தவரை விசாரித்தேன். பத்து ரூபாய் வாங்கி பதினொரு மாதம் ஆகிவிட்டதாகவும் கேட்டால் “உனக்கு முதி குடுத்தவனெல்லாம் சும்மா இருக்கான் உனக்கென்ன அவசரம்” எனக் கேட்பதாகவும் சொன்னான். “பத்து ரூபாய்க்காக இப்படி அவமானப்படுத்தலாமா? அதுவும் நடு வீதியில்?” என்றேன். “அப்ப அந்தப் பத்து ரூபாயை நீ கொடு” என்றார்.

இது நல்ல சந்தர்ப்பம் என்பது மனம். குறள் நெறியைக் கடைப்பிடிப்பவனல்லவா நான்? உடனே பத்து ரூபாயைக் கொடுத்தேன். என்ன நினைத்து? காலையில் நம்மிடம் அடிப்பவன் மாலையில் நமக்காகப் பத்து ரூபாய கொடுத்து அவமானத்திலிருந்து காப்பாற்றுகிறானே என்று நானித்தலை குனிவான். திருக்குறள் நெறிப்படி இவனுக்கு இதுதான் தண்டனை.

ஆயுள் முழுவதும் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் தான் செய்த தீமையையும் நான் செய்த நன்மையையும் நினைத்து நினைத்து வெட்கப்பட்டுத் தலை குனிவானே! ஆயுள் தண்டனை அல்லவா இது? இவ்வாறெல்லாம் நினைத்துத்தான் பத்து ரூபாயை கொடுத்து அவனை அவமானத்திலிருந்து மீட்டேன்.

ஆனால் நடந்ததோ வேறு.

கடன் தந்தவன் என்னிடம் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றவுடன், இவன் தன் கூட்டாளியிடம் சொன்னான் “அட, இப்படிப்பட்ட ஆள் இருக்கும்போது, எதற்காகக் கண்டவனிடமும் கடன் வாங்கி அவமானப்பட வேண்டும்? இவரை காலையிலே ஓர் அறை கொடுத்தால் மாலையிலேயே பத்து ரூபா கொடுக்கிறாரே! அப்பப்பத் தேவைக்கேற்றபடி இவருக்கு அறைய விட்டு வாங்கிட வேண்டியதுதான். 50 ரூ வேணும்னா 5 அறை கொடுக்கணும். அவ்வளுவுதான். இவ்வளவு நாளா இந்த இளிச்சவாயனைத் தெரிஞ்சிக்காம இருந்திட்டோமே”.

இவ்வாறு அவன் பேசியதைக் கேட்டதும் என சித்தம் கலங்கியது. “திருவள்ளுவரே உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தால் எனக்கு இளித்தவாயன் பட்டந்தானா?” என்று புலம்பினேன். வீடு சென்று திருக்குறளைப் புரட்டினேன்.

பொறித்தட்டினாற் போன்று புலப்பட்டது. ஒரு திருக்குறள் தெரிந்து செயல்வகை அதிகாரத்தில் காணப்படும் குறள்.

‘நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை’

எல்லார்க்கும் நல்லது செய்து ஏமாந்து விடாதே! அவரவர் பண்புக்கேறப நடந்து கொள்!

தீமைக்குப் பதில் நன்மை செய்யும்போது திருந்துபவர்க்கு, மனம் வருந்துவோர்க்கு மேற்கொண்டு தீமை பக்கம் சாயாதவர்க்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.

திருவள்ளுவர் அறிவுரை மட்டுமா சொல்கிறார். எச்சரிக்கையும் செய்கிறார்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதும் இதுதான். பிச்சை எடுப்பவன் போல வந்து வீட்டை நோட்டம் விட்டுத் திருடுகிறவனும் உண்டே!

ஆசிரியர்களாகிய நாங்கள் மாணவர்களைத் தரம்பிரித்துப் பாடம் நடத்துவோம். 80க்கு மேல் மதிப்பெண்பெறும் மாணவர்களுக்கு அவ்வப்போஉ சந்தேகங்களைத்தெளிவுபடுத்தினாலே போதும். அழகாகவும் தெளிவாகவும் பதில் எழுதும் முறையைத் தெரிவித்தால் அதுவே போதும். அவன் 100க்கு 100 வாங்குவான்.

50க்கு மேல் 60,70 என்று மதிப்பெண் பெறுபவனைச் சற்றுக் கவனிகவேண்டும். அவனுகு எங்கோ ஒரு சறுகல் இருக்கிறது. இலக்கணத்தில் கவனிமில்லாமல் இருக்கலாம். எழுத்துப் பிழைகள் இருந்தாலும் இருக்கலாம். அதைக் கவனித்தது அப்பாடத்தை மட்டும் போதித்து இட்டால் போதும் முதல் தர மாணவனாய் மாறி விடுவான்.

25 முதல் 50 வரை மார்க்கு வாங்கும் மாணவனுகுத்தேர்வு நேரத்தில் சில நல்ல அறிவுரைகளை அளித்து வைக்கலாம்.

0 முதல் 10 வரை மதிப்பெண்பெறு விட்டு பூஜ்யம் மதிப்பெண் வாங்கிய நண்பர்களோடு பள்ளி முடிந்து செல்லும் போது “ஓ.. போடு” என்று உரத்த குரலில் பாடிக்கொண்டு செல்லும் மாணவர்களுக்காகப் பாடுபட நினைத்தால், அவனுக்காக ஒதுக்கும் அந்த நேரம் வீண்நேரம்.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்த ஒருவர்,

‘சொலப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோலக்
கொல்லப் பயன்படும் கீழ்’

“ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்” என்று நம்முன்னோர் சுருக்கமாக்கினர்.

கசக்கிப் பிழிந்தால்தானே கருப்பஞ்சாறு கிடைக்கிறது. எடுத்து அழுத்திப் பிழிந்ததும் எலுமிச்சைச்சாறு கிடைத்துவிடுமே.

கருப்பஞ்சாறு வேண்டுமானால் கரும்பை ஆலையிலிட்டுக் கசக்கியே ஆகவேண்டும்.

“நல்ல மாட்டுக்கு ஒரு சுடு” என்பதும் நன்மொழிதான். 5 கோடி லாட்டரி அடித்தது ஒருவருக்கு. அவர் வீட்டுக்கு வழக்கமாக வரும் பிச்சைக்காரன் அன்றும் வந்தான். புதுப்பணக்காரருக்கு ரொம்ப நாளாகவே அவன் மீது ஓர் இரக்கம் உண்டு. இப்போதோ அவரிடம் நிறைய பணம் இருக்கிறது.

பிச்சைக்காரனை அழைத்தார். “இந்தா எடுத்துக்கொள் ஒரு லட்சம். இனிமேலாவது நன்றாக இரு” என்று கொடுத்தார். ஒரு லட்சம் நாலு நாள் கழித்து காலை நேரத்தில் அதே பிச்சைக்காரனின் குரல் “அம்மா அன்னபூரணி, அஞ்சு நாளா பட்டினிம்மா தருமம் பண்ணுங்க. பகவான் உங்களுக்கு அள்ளி அள்ளிக் குடுப்பாரு. நீங்க கொஞ்சம் கிள்ளிக் கிள்ளாயவது குடுங்க தாயி!”.

பணக்காரர் கதவைத் திறந்து பார்த்தார். அவனேதான். “என்னப்பா ஒரு லட்சரூபா குடுத்தேனே அதை என்ன செய்தே?” மறுபடியும் பிச்சை எடுக்கறியே?” என்று பதறினார்.

அவன் எந்த பதற்றமும் இல்லாமல் பதில் சொன்னான். “நீங்க குடுத்த பணம், வராம வந்த மகாலட்சுமி ஆச்சே! வீணாக்குவேனுங்களா? இதோ பாருங்க தங்கத்திலே திருவோடு செஞ்சிட்டேன்”.

மூடி வைத்திருந்த திருவோட்டை எடுத்துக்காட்டினான். பிச்சைப் பாத்திரம் தங்கமுலாமிட்டதாக தகதகத்தது.

இவன் பிச்சை எடுப்பதற்கென்றே பிறந்தவன் திருந்தமாட்டான். புதுக்கோடீஸ்வரரின் ஒரு லட்சம் பாழ்!

பால் வியாபாரியிடம் வீட்டுக்காரர் சொன்னார், “பாலில் நீர் கலந்து விற்கிறியே, நீ நரகத்துக்குத்தான் போகணும். நல்ல பாலா தந்தா சொர்கத்துக்குப் போகலாம். எங்கே போக விருப்பம்? நரகமா? சொர்க்கமா?” அதற்குப் பால் வியாபாரம் நல்ல நடக்குமோ அங்கபோக வேண்டியதுதான்”
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

No comments: