அடர்ந்த காடு. அடர்ந்திருந்தால்தானே காடு?
சிங்கராஜா பவனிவரப் புறப்பட்டார். ராஜா என்றால் ‘கைத்தடி’ வேண்டுமே? ஒரு கரடியும், ஒரு நரியும் ‘கைத்தடிகளாக’ உடன் புறப்பட்டன.
எதிரே ஒரு மான் வந்தது. சிங்கம் அதனை வேட்டையாடிக் கொன்றது. கரடியைப் பங்கு பிரிக்கச் சொன்னது.
கரடி, மானின் தோலைக் கிழித்து தசை வேறு, எலும்பு வேறாகப் பக்குவம் செய்து சரி யாக மூன்று பாகங்களாகப் பிரித்து வைத்தது.
தசையை மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக ஆக்கி மூன்று குவியலாக்கியது. மூளையை மூன்று பங்காக்கித் தனித்தனியே பிரித்தது. தொடைக்கறியா? மூன்று பங்கு. நெஞ்சு எலும்பா? மூன்று பங்கு. என்று மிகச் சரியாக மூன்று பங்காக்கி வைத்தது.
இறுதியாக ஒவ்வொரு கூறையும் தனித்தனியே கையில் தூக்கிப் பார்த்து, சரியான எடையில் ஒவ்வொரு பங்கும் இருப்பதை உறுதிசெய்து கொண்டது. கரடிபோல இல்லவே இல்லை. ஒரு நேர்மையான நீதிபதி யாகவே செயல்பட்டது.
வேலை முடித்து சிங்கத்தைப் பார்த்து, ‘மகாராஜா சரியாகப் பங்கு பிரித்து விட்டேன்’ என்று, சரியாகப் பணியாற்றியதற்கான பாராட்டை எதிர்பார்த்து, சிங்கராஜா முகத்தை உன்னிப்பாகப் பார்த்தது.
சிங்கராஜா முகம் கடுப்பாகியது. கரடியைப் பார்த்து கர்ஜித்தது ‘ம்… சரியாகப் பிரி’
‘மகாராஜா சரியாகத்தானே பிரித்துள்ளேன்’
‘ம்… எதிர்த்தா பேசுகிறாய்? சரியாகப் பிரி’
கரடி மறுமுறையும் ஒவ்வொரு கூறையும் சரிபார்த்தது.
‘எல்லா வகைக் கறிகளும் ஒவ்வொரு பங்கிலும் இருக்குமாறு பிரித்துள்ளேன். ஒவ்வொரு பங்கும் சம எடையில் இருக்கிறது. இதுதானே சரியாகப் பிரிக்கும் முறை அரசே!’ என்றது.
சிங்கம் சீறிப்பாய்ந்து ஒரே அறையில் கரடியைக் கொன்றது.
‘பங்கு பிரித்திருக்கிறானாம் பங்கு! நரி, நீ பங்கு பிரி’ கர்ஜனைக் குரலில் கட்டளை யிட்டது.
நரி எல்லாக் கறிகளையும் ஒரு பக்கமாக மலைபோல் குவித்தது. ஒரே ஒரு எலும்புத் துண்டை மட்டும் இன்னொருபுறம் வைத்தது.
‘மகாராஜாவே! எதிர் எவரும் இல்லாத ஏந்தலே! நீதிக்குத் தலைவணங்கும் நேர்மையின் சின்னமே! தங்களின் மேலான உத்தரவின்படி இரு பங்குகளாகப் பிரித்துள்ளேன். அதோ அந்த மலை போன்ற பங்கு தங்களுடையது. இந்த எலும்புப் பங்கு என்னுடையது. பிரித்த விதம் சரிதானா? அல்லது என் எலும்புப் பங்கைப் பாதியாகக் குறைத்து அதையும் தங்கள் பங்கில் சேர்த்து விடவா?’
சிங்கத்திடம் தண்டனிட்டு, இவ்வாறு கூறியது.
சிங்க மகாராஜா புளகாங்கிதம் அடைந்து விட்டார் என்பதைப் பிடரிமயிர் கூட நிமிர்ந்து நிமிர்ந்து நின்று அடையாளம் காட்டியது. களிப்புற்ற சிங்கம் முழங்கியது.
“நீதான் என் அணுக்கத் தொண்டனாய் இருக்கும் முழுத் தகுதியையும் பெற்றுள்ளாய். சபாஷ்! இன்றுமுதல் நீதான் மந்திரி! அதுசரி, இவ்வளவு சரியாகப் பங்குபிரிக்க எப்படிக் கற்றுக்கொண்டாய்?’
நரி கைகட்டியபடியே சொல்லிற்று. ‘கரடியைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன் மகாபிரபு’
இது ஒரு கதைதான். கருத்து என்ன?
‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ இது பாரதியாரின் சத்தியவாக்கு.
மன்னன் எதை விரும்புகிறானோ, மக்கள் அதையே நிறைவேற்றுவார்கள். ‘தலைபோன வழியில் வால் போகும்’ என்பது முதுமொழி.
குடும்பத் தலைவனின் நடத்தை குழந்தை களின் நடத்தை, இதற்கு யாரைப் போய்க் கேட்க வேண்டும்?
நண்பனின் மனநிலைக்கேற்ப நாம் நடப்பதில்லையா? அப்படியானால் நமக் கென்று தனித்தன்மையே கிடையாதா? என்றால் உண்டு.
தன் மனநிலைக்கேற்ப மற்றவர்களை நடத்தும் மனிதரும், மற்றவர் மனநிலைக்கேற்ப தான் நடந்து கொள்ளும் மனிதரும் என்று இருவேறு தன்மைகொண்ட மனிதர்கள் இருக் கின்றனர். ஒருவரிடமே இருவேறு மனநிலை களும் சமயத்துக்கேற்ப அமைவதும் உண்டு.
நண்பனின் சோகத்தில் தானும் பங்கேற்று துயரமுகம் கொள்பவரும் உண்டு.
நண்பனின் சோகத்தைத் தன் இயல் பினால் மாற்றி மகிழ்விப்பவர்களும் உண்டு.
‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது கலித்தொகை. பாடு என்பது தன்மை. பிறர் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகு தலே பண்பாகும். இது கலித்தொகை என்ற சங்கநூல் காட்டும் பண்புக்கான இலக்கணம்.
பிறரின் தன்மைக்கேற்ப நாம் நடந்து நடந்து, நமக்குள் இருக்கும் நம்மை இழந்து விடலாமா?
அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், ‘பீர்பால்! நம் தலைநகரில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?’ என்று கேட்டார்.
ஓர் ஆட்சித் தலைவன் கவலைப்பட வேண்டிய விஷயமா இது?
எத்தனை ஏழைகள்? என்ன பரிகாரம்? குடிநீர் தர வழி? சாலை களைச் செப்பனிட என்ன செய்ய லாம்? இவ்வழியில் சிந்திக்க வேண்டிய தலைவன் பொழுது போக்குக் கேள்வி கேட்டு விளையாடுகிறான். என்ன செய்வது? அவன் மன்னன். பீர்பால் அவனுக்குக் கீழ் பணிபுரிபவர்.
உண்மையைச் சொன்னால் உதைவிழும். அறிவாளிகள் நேரடியாக நியாயம் பேசி நிம்மதியை இழந்துவிட மாட்டார்கள்.
பீர்பால் சிந்தனை செய்வதுபோல் பாவித்து, கூட்டல், கழித்தலை எல்லாம் விரலிலேயே கணக்கிட்டுக் கண்டுபிடித்தது போல மன்னனின் வினாவுக்கு விடை பகர்ந்தார்.
‘பாதுஷா நம் நகரில் 23,456 காக்கைகள் இருக்கின்றன’ என்றார்.
மன்னருக்கு சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகப்பட்டால்தானே அவர் மன்னர்.
‘சரி எண்ணிப்பார்க்கும்போது நூறு இருநூறு கூடுதலாக இருந்தால்?’
‘கூடுதலாக இருந்தால் அது என் பிழையல்ல பாதுஷா. வெளியூர் காக்கைகள் விருந்தாளியாக வந்திருக்கும்.’
‘குறைந்தால்?”
‘இந்த ஊர் காக்கைகள் வெளியூருக்கு விருந்தாளியாகச் சென்றிருக்கும் பாதுஷா’.
மன்னர் மனம் மகிழ்ந்து பரிசளித்ததாகக் கதை சொல்கிறது. வெட்டித்தனமாகக் கேள்வி கேட்ட மன்னருக்கு விளையாட்டுத்தனமாக பதிலளிக்கும் பீர்பாலைக் கண்டு நாமும் மகிழ்கிறோம்.
இப்படித்தான் நாமும் இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக அணுகுகிறவர்களை நாமும் அறிவுப்பூர்வமாகவே சந்திக்கலாம்.
ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்.
“அறிவுடையார் முன் அறிவுடைய வனாகவும், முட்டாள் முன் அவனைவிட முட்டாள் போலவும் நடந்துகொள்” என்பது வள்ளுவர் காட்டும் நெறி.
ஒருமுறை சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். நண்பர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
“டேய், அமெரிக்க ஜனாதிபதி யார்னு தெரியுமா?” என்று ஒருவர் கேட்டார். கேட்கப் பட்டவருக்கு பதில் தெரியவில்லை. ஆனால், அதற்காக அவர் கவலைப்படவில்லை.
அவர் இவரிடம் கேட்டார், “நம்ம தெருவில கந்தசாமி அண்ணன் போனவாரம் செத்தாரே, அவங்க அப்பா பேர் உனக்குத் தெரியுமா?”
இவருக்கோ தெரியவில்லை. இவரை விட 50 வயது கூடுதலாக இருந்த கந்தசாமியின் தந்தை பெயர் தெரியாதது அறிவில் குறைபாடு ஆகுமா?
கந்தசாமியைத் தெரிந்துவைத்திருப்பதே அந்தத் தெருவில் அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என்பதால்தான்! அவருடைய தந்தை பெயர் தெரியாதது தவறா? அவர் என்ன ஜவகர்லால் நேருவா, தெரிந்து வைத்திருக்க?
“கந்தசாமி தந்தையின் பெயர் எனக்குத் தெரியாது” என்றார்.
“அடுத்த வீட்டுக்காரரையே தெரியாத நீ அமரிக்க ஜனாதிபதி பற்றிக் கேக்கறியே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றார் அமெரிக்க ஜனாதிபதி பெயர் தெரியாதவர்.
நான் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். அந்த அறியாதவனிடம் போய், இவன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாமா? அறியாதவன் இப்போது அறிவாளி யைப் போல் அறிந்தவனை இகழ்ந்து பேசுகிறான்.
‘வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல்’ என்று வள்ளுவர் கூறுவதைப் படித்தி ருந்தால் அறியாதவனிடம் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டிருக்க மாட்டான்.
‘பாடறிந்து ஒழுகும் பண்பு’ நமக்கு வேண்டும். இல்லையேல் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும்.
விபீஷணன் கும்பகர்ணனிடம் தன்னைப் போலவே இராமனிடம் வந்து சேர்ந்து கொள்ள வேண்டுகிறான். கும்பகர்ணன் விபீஷணன் கூற்றை மறுக்கிறான். ‘இராவணன் தீமை செய்கிறான். நான் தடுக்க முயல்கிறேன். முடியவில்லையென்றால் அவனுக்கு முன் சாகவே விரும்புகிறேன்’ என்கிறான் கும்பகர்ணன்.
…………………………….
திருத்தலாம் ஆகில் நன்றே
திருத்துதல் தீராதாயின்
………………………………
……………………………..
ஒருத்தரின் முன்னம் சாதல்
உண்டவர்க்கு உரியதம்மா
என்பது கும்பகர்ணனின் பேச்சாகக் கம்பன் தருவது.
இராவணன் தீமையைத் திருத்த அறிவுரை தந்தான் கும்பகர்ணன். இராவணன் இசைய வில்லை. என்ன செய்கிறான் கும்பகர்ணன்? தீமைக்கும் உடன்படாமல் போரில் சாவதற்காக வருகிறான். செத்தாலாவது இராவணன் திருந்துவான் என்று நினைக்கிறான்.
தன் சொந்த இயல்பை இழக்காமலே அண்ணன் செய்யும் தீங்கையும் சுட்டிவிட்டு இறக்கும் கும்பகர்ணன் நமக்கு ஒரு பாடமாக விளங்கும் நல்ல படம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்
No comments:
Post a Comment