சுட சுட செய்திகள்

Friday, December 23, 2011

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (3) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (3)

தாணிப் பாறையிலிருந்து கிளம்பி அத்திரி மகரிஷி மற்றும் மச்சமுனிவரின் ஆசிரமங்களின் வழியே தனது ஆசிரமம் வரை நம்மை அழைத்து வந்த கோரக்கர், சதுரகிரி மலையில் வாசம் செய்கிற மற்ற பிற சித்தர்களின் ஆசிரமங்களுக்கு செல்லும் வழியை தெளிவாக கூறியிருக்கிறார்.

கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய் அம்புவிடும் தூரத்தில் “மஞ்சள் பூத்தவளை” என்னும் மூலிகை இருக்கிறதாம்,அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அம்புவிடும் தூரத்தில் கசிவுத்தரை இருக்கிறது. இங்கிருந்து வடக்குப் பக்கம் போனால் மேடு ஒன்றும் அதனையொட்டி ஒரு ஓடையும் வரும் என்கிறார். இந்த ஓடைக்கு வடக்கே சமதளமான மண்தரையும் பக்கத்தில் பாறையும் இருக்குமாம்.

இந்த பாறையின் வடக்கே இருக்கும் ஓடையின் வடக்குப் பக்கத்தில் அம்புவிடும் தூரத்தில் அரிய மூலிகையான “அமுதவல்லிச் செடி” இருக்கும். இந்த செடிக்கு நேர்வடக்காய் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதையில் நடந்தால் எதிர் வரும் மேட்டில் இரட்டை லிங்கம் இருக்கும் என்கிறார். இந்த லிங்கத்துக்கு தென்கிழக்கு மூலையில் ஆற்றையொட்டி யாக்கோபு சித்தர் என அறியப்படும் இராமதேவரின் ஆசிரமம் இருக்கிறது. இங்கே “ரோம விருட்சமும்” அதன் பக்கத்தில் நாகபடக் கற்றாழையும் இருக்கிறது என்கிறார்.


இராம தேவரின் ஆசிரமத்தில் இருந்து வடக்கே நடந்தால் வரும் சமதளத்தின் கிழக்கே போனால் பசுக்கிடை வரும், அதைத் தாண்டினால் எக்காலத்திலும் வற்றாத நவ்வலூற்று சுனையும் அதனையொட்டி பாறையும் இருக்கிறது. அதில் பாம்புக் கேணி இருப்பதாக குறிப்பிடுகிறார். அதனைத் தாண்டி கிழக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் வழுக்கைப் பாறையையும் அதற்கப்பால் இருக்கும் பச்சரிசி மேட்டையும் கடந்தால் தெக்கம் பண்ணைமலை வழி வருமாம்.

இந்த வழியே கிழக்குப் பக்கமாக அரை நாளிகை நடந்தால் சின்ன பசுக்கிடையும், ஒப்பில்லா சாயையும் இருக்கிறதாம். இதனைத் தாண்டி கிழக்கே செல்ல பலா மரமும், கருப்பண்ண சுவாமி கோவிலும் இருக்கும் என்கிறார்.  இந்த கோவிலுக்கு பின்புறம்தான் தைலக் கிணறு இருக்கிறது. இரசவாதம் செய்ய பயன்படுத்திம் தைலம் இந்த கிணற்றில் நிரப்பப் பட்டிருப்பதாக கருதப் படுகிறது. கருப்பண்ண சுவாமியின் அருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த கிணற்றை அணுக முடியுமென்கின்றனர்

சக்தி வாய்ந்த இந்த கோவிலை கடந்து போனால் ஆறு ஒன்று வரும், இந்த ஆற்றுக்குள்தான் பேச்சிப்பாறை இருக்கின்றதாம். இதன் வடக்குப் பக்கமிருக்கும் மேடேறினால் அங்கே துர்வாச ரிஷியின் ஆசிரமத்தை காணலாம் என்கிறார். இந்த ஆசிரமத்தின் கிழக்கே அம்புவிடும் தூரத்தில் வெள்ளைப் பாறையும், சந்தன மகாலிங்க சுவாமி கோவில் ஓடையும் இருக்கும். அதைக் கடந்து கிழக்கே பயணிக்க முச்சந்தியான பாதை ஒன்று வருமாம். இதில் தெற்கே போகும் பாதையில் சென்று மேடேறினால் சுந்தரர் கோவில் இருக்கிறது என்றும் அதை வணங்கி தெற்கே ஆற்றங்கரையோரமாய் கூப்பிடு தூரத்தில் மகாலிங்க கோவில் இருக்கிறது.

இதன் வடக்குப் பக்கம் கூப்பிடு தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அரை நாளிகை நடந்தால் பெரிய சுரங்கவழி ஒன்று இருக்கும் என்கிறார். இதில் நுழைந்து அரை நாளிகை நடக்க சந்தன மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது என்கிறார். இந்த கோவிலின் வடக்குப் பக்கத்தில் காளிகானலில் இருந்து நீரோடை வந்து விழுந்து கொண்டிருக்குமாம். அதில் நீராடிய பின்னரே சந்தன மகாலிங்க சுவாமியை வணங்க வேண்டும் என்கிரார்.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் மானிடர்கள் பூசை இல்லை என்றும் தேவரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் பூசைதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் என்ற தகவலையும் கோரக்கர் குறிப்பிடுகிறார். இந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் சட்டை முனியின் குகை இருக்கிறது. அந்த குகையின் தெற்கே கூப்பிடு தூரத்தில் வெண்நாவல் மரமும் அதன் இடது புறமிருக்கும் மண்மலையின் தெற்கே சமதளத்தில் வனபிரமி என்ற அரிய வகை மூலிகையும் வளர்ந்திருக்கும் என்கிறார்.

சட்டை முனி குகைக்கு நேர் கிழக்காக வரும் பாதையில் ஒரு நாளிகை தூரம் சென்றால், வடக்கே செல்லும் பாதையில் போய் சேரும் அதில் ஒரு நாளிகை நடக்க கும்ப மலை வரும் என்கிறார். இந்த கும்ப மலை அருகே இருக்கும் ஒரு பெரிய குகையில்தான் அகத்தியர் வாசம் செய்கிறார் என அகத்தியரின் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கிறார் கோரக்கர்.

No comments: