பகுதி (4)
குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.
ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.
அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.
இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.
சஞ்சீவி மூலிகையின் மேற்காக மஞ்சளூற்று இருக்கிறது. அந்த ஊற்றுக்கு வடபக்கம் அம்பு விடும் தூரத்தில் சதம்புத்தரை இருக்கிறதாம், அதன் கீழ்ப்புறம் கசிவுத்தரையில் அழகானந்தர் ஆச்சிரமம் இருக்கிறதாம். அங்கிருந்து நேர் கிழக்காய் வந்தால் மீண்டும் மகாலிங்கர் சந்நிதியில் வந்து சேரும் என்கிறார் கோரக்கர். இங்கிருந்து தெற்கே சென்றால் சன்னாசிவனம் வரும், அதன் தெற்கே போகும் பாதையில் ஒரு நாளிகை நடக்க ஒரு ஓடையும், சங்கிலிப் பாறையும் வருமாம்.
அதனை கடந்து கூப்பிடு தூரம் போனால் அநேக மரங்கள் சூழ பிரம்ம முனியின் ஆச்சிரமம் அமைந்திருக்கும் என்கிறார். ஆச்சிரமத்தின் தெற்குபக்கம் போகிற பாதையில் ஒரு நாளிகை மலை ஏற அதன் சரிவில் காளங்கிநாதரின் குகை எதிர்படும் என்கிறார். அந்த குகையின் சரிவில் அம்புவிடும் தூரத்தில் என்றும் வற்றாத தசவேதி உதகசுனை இருக்கிறதாம்.
காளங்கி நாதர் குகையிலிருந்து தெற்க்கு பக்கமாய் கூப்பிடு தூரத்தில் தபசு குகை வரும். அந்த குகையிலிருந்து வடக்குப் பக்கம் போகும் பாதையில் சென்றால் மீண்டும் மகாலிங்கர் சன்னிதிக்கே வரும், அதனால் அதை விடுத்து கிழக்குப் பக்கம் சென்றால் அரை நாளிகை தூரம் நடந்தால் கன்னிமார் கோவிலும், பளிங்கர் குடிசையும் வருமாம். அங்கிருந்து தெற்கே அரை நாளிகை தூரம் வந்தால் நந்தீசர் வனமும், அதனுள் அவர் ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.
ஆசிரமத்தின் வடக்கு பக்கமாய் போகும் பாதையில் செல்ல கிழக்கே இருந்து ஒரு பாதை வந்து சேருமாம், அந்த பாதை வழியே அரை நாளிகை நடக்க பளிங்கர் பாறையும் அதன் தெற்கே செல்ல அநேக மரம் செடிகொடிகள் சூழ தன்வந்திரியின் ஆச்சிரமம் இருக்கிறதென்கிறார்.
புசுண்டர்,உரோமரிஷி, யூகிமுனிவர், சுந்தரானந்தர், அழகானந்தர், காளங்கிநாதர், நந்தீசர், தன்வந்திரி ஆகியோரின் ஆச்சிரமங்களுக்கு செல்லும் வழியினை கோரக்கர் வாயிலாக தெரிந்து கொண்டோம். இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு கூட இந்த இடங்களை தேடிட முடியுமென கருதுகிறேன்.
No comments:
Post a Comment