பகுதி (5)
தன்வந்திரியின் ஆச்சிரமத்தின் வடக்கே வந்தால் கிழக்கிலிருந்து ஒரு பாதை வந்து சேரும்,அந்த பாதையின் தெற்கே வேறொரு பாதை இருக்கும் அதில் நடக்க வடக்கு புறமாய் ஒரு கானலை காணலாம். இதற்கு எமபுர கானல் என்று பெயர். இந்த கானலுக்கு தென்புறமாய் கிழக்கில் போகும் பாதை ஒன்று வரும். அதில் கூப்பிடு தூரம் நடக்க வாத மேடும் அதில் வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் இருக்குமென்கிறார். இங்கிருந்து அம்புவிடும் தூரம் வரை சதும்புத் தரை இருக்கிறது. அதற்கு தெற்கே வந்தால் குரு ராஜரிஷியின் வனமும் அதனுள் அவரது ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.
ராஜ ரிஷியின் ஆச்சிரமத்தின் நேர் வடக்கில் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதை ஒன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஒரு மண்மேடு எதிர்ப்படும் அதனருகில் அழகிய செடிகள் சூழ்ந்த வனமிருக்கும். அந்த வனத்தின் நடுவே கொங்கணவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார். ஆச்சிரமத்தின் கிழக்கே போனால் எல்லைக்கல் குட்டம் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே மூன்று நாளிகை நடக்க தபோவனம் எனப்படும் மாவூற்று வரும், அதன் வடக்கே சென்றால் உதயகிரி எல்லை வருமாம். அங்கே உதயகிரி சித்தர் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.
இங்கிருந்து கீழ்பக்கமாய் இறங்கும் பாதைவழியே வர அரை நாளிகை பயணத்தில் மீண்டும் எல்லை குட்டத்திற்கு வந்து சேருமாம். இதன் வடக்கே பிருஞ்சக முனிவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.ஆச்சிரமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கும் சதம்புத் தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். சஞ்சீவி மூலிகை சதம்புத் தரையில் மட்டுமே வளரும் இயல்புடையதெனெ தெரிகிறது.
இந்த சதம்புத் தரைக்கு மேல்ப்பக்கம் போகும் வழியில் அம்பு விடும் தூரம் சென்றால், ஒரு யானை படுத்திருப்பதை போல் பெரிய பாறை ஒன்று இருக்கும். அந்தக் தென்புறமாக அம்பு விடும் தூரம் நடந்தால் சரளைத்தரை இருக்கிறது.அதற்க்கு நேர் மேற்கில் கூப்பிடு தூரத்தில் மலையோடை இருக்கிறது,அந்த ஓடையினை கடந்து அம்புவிடும் தூரத்தில் யானைக் குட்டியைப் போல வெள்ளை பிள்ளையார் இருக்கிறார்.அருகில் போய் பார்த்தால் பாறை போலவும், தொலைவில் இருந்து பார்க்க பிள்ளையாராகவும் தெரிவார் என்கிறார் கோரக்கர்.
இங்கிருந்து மேற்கே ஒரு நாளிகை நடக்க வாதமேடு வரும்.இந்த வாத மேட்டில் தான் பதினெண்சித்தர்களும் சேர்ந்து ரசவாதம் செய்து பார்த்னர் என்கிறார். அதன் பொருட்டே இந்த இடம் வாதமேடு என அழைக்கப் படுகிறதாம்.
வாதமேட்டின் மேற்கே அம்புவிடும் தூரத்தில் தத்துவ ஞானசித்தர் குகை இருக்கிறதாம்.அதன் வடக்கே அரை நாளிகை நடந்தால் சிறிய குட்டம் வரும், அதன் மேற்கே செல்லும் பாதையில் சென்றால் கன்னிமார் கோவில் வரும், அதன் மேற்கே கூப்பிடு தூரத்தில் மகாலிங்கர் சந்நிதி வருமென்கிறார். சந்நிதியின் நேர் வடக்கே போகும் பாதையில் ஒரு ஆறு இருக்கிறது, ஆற்றின் தென் புறமாய் இரண்டு பாதை பிரிந்து செல்லும், அதில் மேற்கே போனால் நாம் கிளம்பிய இடமான தாணிப்பாறைக்கு செல்லும். வடக்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை நடக்க குளிப்பட்டி பொய்கை இருக்கிறது.இதன் தெற்கே எல்லைக் குட்டம் இருக்கிறது.இதன் அருகில் பால் பட்டை மரமிருக்கிறதாம்.
பால் பட்டை மரத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் சென்றால் அம்பு விடும் தூரத்தில் திருக்கைப் பாறை இருக்கிறது.அதன் மேற்கே யாகோபுச்சித்தர் ஆச்சிரமம் இருக்கிற்து. ஆச்சிரமத்தின் மேற்க்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் கடுவெளிச்சித்தர் குகை இருக்கின்றது. இதனை தாண்டி நடந்தால் கருங்கானல் ஒன்று வரும் அதில் நுழையாது மேலே எற அரை நாளிகை பயணத்தில் கசிவுத் தரை இருக்கிறதாம்.
இந்தக் கசிவுத்தரைக்கு வடப்பக்கம் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் தேடிக் கானல் இருக்கிறது. அந்தக் கானலுக்கு கீழ்ப்பக்கம் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் அழுகண்ணிச் சித்தரின் குகை இருக்கிறது. இதன் தெற்கே கூப்பிடு தூரத்தில் சிவவாக்கியரின் குகை இருக்கிறது. இரண்டு சித்தர்களின் குகைகள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான் என்கிறார். இங்கிருந்து மேற்கே போனால் பிரமகிரி எல்கை என்று சதுரகிரிப் பயணத்தை நிறைவு செய்கிறார் கோரக்கர்.
1 comment:
நன்றி
Post a Comment