சட்டத்தின் படி (9)
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.
பார்வையில் பலவிதம் என்ற உண்மை பானுவின் பார்வையில் ராசாத்தியைப் பார்க்கும் பார்வை வினாடிக்கு வினாடி மாறுபட்டது.
மோனோலிசாவின் பார்வையைப் போல் இருந்தது பானுவின் பார்வை. ஒன்றும் புரியவில்லை முத்துவிற்கு.
கோபம் வெறுப்பு ஏளனம் கடைசியில் ராசாத்தியை ஏற இறங்க பார்த்தபின் கொஞ்சம் அனுதாப பார்வைத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் பார்வையால் உள்ளே வா என்பது போல் இருந்தது அவள் பார்வை.
முத்து முள்ளே செல்ல ராசாத்தி பின் தொடர்ந்தாள்.
கோயமுத்தூர் சுற்றுவட்டார மண்ணுக்கே சொந்தமான முதல் உபசரிப்பு, யார் வந்தாலும் வந்தவர்க்கு முதலில் தண்ணீர் கொடுப்பது. எங்கிருந்தோ வந்தவர்கள் தாகத்திலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஆண்டாண்டு காலமாய் இந்த பழக்கம் இன்னும் இந்த கொங்கு மண்ணில் இருக்கிறது.
பானு என்கின்ற இந்த பானுமதி கோயமுத்தூரைச் சேர்ந்தவள். வீட்டார் பார்த்து முத்துவிற்கு மணமுடித்து வைத்தார்கள். மிகவும் நல்ல பழக்கம் கொண்ட ஒரு குடும்பப் பெண். ஆனால் என்ன?.. கொஞ்சம் சந்தேகப் புத்தி.
உள்ளே சென்ற பானு, ராசாத்திக்கு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்ன முழுகாம இருக்கியா?”
தலையை குனிந்தபடி “ம்” என்றாள் ராசாத்தி.
சற்று பதற்றமான முகத்துடன் ராசாத்தியையே பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.
முத்துவின் சம்பாதனை இந்த வீட்டில் வயிற்றுக்கு மட்டும் சரியாக இருந்தது. சின்ன வீடு. மொத்தம் இரண்டே அறைகள் தான். ஒன்று வந்தவர் அமருவதற்கு. அல்லது படுப்பதற்கு, இன்னொன்று சமையல் செய்ய.
ஏதோ மனதில் தோன்றியவளாய் வேகமாக சமையல் அறைக்குள் சென்றாள் பானு.
“என்னங்க….”
பானுவின் குரல் சற்று சப்தமாகவும், கோபமாகவும் இருந்தது.
முத்து “என்ன பானு” என்றபடி உள்ளே சென்றான்.
“மெதுவாய் பேசு பானு” என்றான் முத்து.
“இனி பேசறதுக்கு என்ன இருக்கு? அதுதான் கூட்டிட்டு வந்துட்டியே ஒரு சக்களத்தியை…”
தங்கச்சியாய் நினைத்து பாசத்தோடு கூட்டி வந்தவளை சக்களத்தி என்று சொன்னவுடன் கோபம் வருவதற்கு முன்பே அவன் கை அவள் கன்னத்தை நோக்கி விரைந்தது.
“பளார்” என்று ஓர் அறை விட்டான் முத்து.
பானுவிற்கு மின்னல் தெறித்தது போல் இருந்தது அந்த அடி. வலி தாங்காமல் ஓ எனக் கத்தினாள்.
அந்த சப்தத்தை கேட்டு பதறியபடி உள்ளே வந்த ராசாத்தி…
“அண்ணா அண்ணியை அடிக்காதீங்க..என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். நான் இங்க இருக்க விரும்பல..அண்ணா நிறைமாசத்துல அண்ணி இருக்குறாங்க..அவங்களை போய் அடிக்கலாமா? இது தப்பில்லையா?” என்று கண்ணீர் மல்க கை யெடுத்துக் கும்பிட்டபடி ராசாத்தி வெளியே புறப்படத் தயாரான போது…
பானுமதி சற்றே யோசித்தவளாய், ராசாத்தியை தடுத்து நிறுத்தினாள்.
“எப்போ நீங்க என்னை அண்ணியா ஏத்துக்கிட்டீங்களோ இனிமே நீங்களும் எனக்கு அண்ணிதான். உட்காருங்க நீங்க எங்கேயும் போக வேண்டாம். இங்கயே என் கூடவே இருங்க”…என்று கண்ணீர் கன்ன மேட்டில் வழிந்தபடி பாச உணர்வுடன் சொன்னாள் பானு.
ராசாத்தி பேச வார்த்தையில்லாமல் வாய் விக்கித்து நின்றாள். அந்த இருவரின் பாசக்குவியலில் சிக்குண்டு மூச்சு திணறியபடி கண்ணீh.; விட்டாள்.
“சரி..அதுதான் சொல்லிட்டாளே..உள்ளே போய் உட்காரு தங்கச்சி”…முத்துவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மனைவியை நினைத்து பெருமைப்பட்டான் முத்து.
“மாசமா இருக்கிறாள் இல்ல…காலையில இருந்து சாப்பிட்டு இருக்கமாட்டா .. போய் ஏதாவது பண்ணிக் கொடு”.. பாசத்தோடு கணவன் என்கிற உரிமையோடு உத்திரவிட்டான்.
“ஆமா ஆமா…இருங்க அண்ணி ..அண்ணன் கூட பேசிட்டு இருங்க… கொஞ்ச நேரத்துலேயே சாப்பாடு செஞ்சுத் தரேன்” என்று சமையல் கட்டுக்குள் போன பானுமதியை ராசாத்தி தடுத்து,
“அண்ணி நான் சமைக்கிறேன்.. நீங்களும் அண்ணனும் பேசிட்டுயிருங்க.எந்தெந்த பொருட்கள் எங்கேயிருக்குன்னு சொன்னா மட்டும் போதும்” என்றாள் ராசாத்தி.
அனைத்து டப்பாவையும் திறந்துக் காட்டினாள் பானு.
பானுசும் ராசாத்தியும் பேசுவதைப் பார்த்து சந்தோசத்துடன் நின்றான் முத்து.
“ஏங்க உங்க தங்கச்சிக்கு முதன் முதலா சாப்பாடு கவுச்சியோட போடலாம்… ஏதாவது போய் வாங்கிட்டு வாங்க…” என்றாள் பானு.
“அண்ணி நான் இனிமேல் இங்கதானே யிருக்கப் போறேன்..இப்போதைக்கு சாம்பாரும்,மிளகுரசமும் பொறியலும் செய்தாலே போதும்..என்ன அண்ணா உங்களுக்கு போதுமா?”
“ராசாத்தி எனக்கு போதும் எதுக்கும் உங்க அண்ணியை ஒரு வார்த்தைக் கேட்டுக்கோ”
“அண்ணி.. நானும், உங்க அண்ணனும் காத்தாட வெளியில் இருக்கோம்”.. என்று சொல்லிவிட்டு வெளித்திண்ணையில வந்து பானுமதியும், முத்துவும் உட்கார்ந்தார்கள்..
“பானு எதற்கு வெளியே வந்தேன்னு எனக்கு தெரியும் ராசாத்தியின் கதையை கேட்கத்தானே?”
“ஆமா சொல்லுங்க அவங்க யாரு? ஆனா.. என்னமோ எனக்கு அவுங்க நல்லவங்களாத்தான் தெரியுது.”
முத்து கடற்கரையில் நடந்த முழுக் கதையையும் ஒன்றுவிடாமல் விபரமாகக் கூறினான்.
“அடப்பாவி தங்கமானவளை தறுதலை அநாதையாக்கிட்டானே?! குழந்தையின் கதி என்ன ஆச்சோ?” என்று கண் கலங்கினாள் பானுமதி.
“அண்ணா அண்ணி வாங்க சாப்பிடலாம”;
இருவருக்கும் சாதம் வைத்தாள்
“அண்ணி நீங்களும் உட்காருங்க”
“இல்லே நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க .. அப்புறம் நான் வாப்பிடுறேன்” என்றாள் ராசாத்தி
சமையலை கணவனும் மனைவியுமு; மாறி மாறி புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்கள்.
கடவுளே இவங்களுக்கு என் வேதனை தெரிய வேண்டாம் என்னோடு இருக்கட்டும். அதற்கு எனக்கு தைரியத்தை கொடு என்று கடவுளை மனதார வேண்டினாள் ராசாத்தி.
விடிகாலை சுமார் 5 மணியளலில் பானுவிற்கு பிரசவ வலி மெல்ல மெல்ல அதிகரித்தது
அண்ணி என்று வலியால் முணுமுணுத்தாள்.
இன்னும் சில நேரத்தில் புதுக் குழந்தை இந்த மண்ணிற்கு வரப்போகிறது. அவளுக்கு இது முதல் பிரசவம் வேறு. பயந்தபடி கதறத் தொடங்கினாள். வயிறும் இரண்டு குழந்தைகள் இருப்பது போல் பெரிதாகவே இருந்தது. பனிக்குடம் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதற்கு தயாராகி கொண்டிருந்தது.
ராசாத்தி அடனே எழுந்து பானுமதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அண்ணா ஏதாவது வண்டியை கூட்டிட்டு வாங்க..உடனே ஆஸ்பத்திரிக்கு போகனும்.
பதறி துடித்துக் கொண்டு எழுந்த முத்து அஞ்சரைப் பெட்டி முதல் அரிசி டின் வரை எல்லாவற்றையும் தேடி எடுத்த பணம் 1200 ஐ தொட்டது.
இதைப் பார்தத ராசாத்தி அண்ணா “இந்தாங்க இதையும் புடிங்க”..என்று தன்னிடமுள்ள சில ஐநூறு ருபாய் அநாட்டுகளை கொடுத்தாள். (கடற்கரையில் தன்னை கற்பழித்த அந்த காமுகன் கொடுத்தப் பணம்)
பானுமதியுடைய அழுகை சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் ஓடி வந்தார்கள்.
அதற்குள் ஒருவர் 101 போன் செய்தார்.
ஆம்புலன்ஸ் வந்ததும் ராசாத்தி, முத்து பிறர் உதவியுடன் பானுவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்க்ள்.
பானுமதியின் அழுகை அவளின் பிரசவ வேதனையை சொல்லாமல் சொல்லியது. அவசர அவசரமாக முத்துவிடம் கையெழுத்து வாங்கினார்கள் அங்குள்ள மருத்துவ ஊழியர்கள்.
ஆப்ரேசன் தியேட்டருக்குள் பானுமதி கொண்டுச் செல்லப்பட்டாள்.
பின்னாலேயே பதற்றத்துடன் சென்ற முத்துவையும், ராசாத்தியையும் தடுத்து நிறுத்தினார் ஒரு நர்ஸ்.
“நீங்கல்லாம் இங்கயே இருங்க…”
டாக்டர் புனிதா உள்ளே சென்ற 30 நிமிடத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது.
முத்துவுக்கும் ராசாத்திக்கும் ஆனந்த அதிர்வை அந்த மழலையின் முதல் அழுதை ஏற்படுத்தியது.ஆனந்தக் கண்ணீர் விட்டான் முத்து.
டாக்டர் புனிதா சிரித்த முகத்துடன் “ஆண் குழந்தை பிறந்திருக்கு”..என்றபடி குழந்தையை ராசாத்தியிடம் கொடுத்தார்.
என் செல்லம்..இதோடா அப்பா பாரு…அத்தையைப் பாரு என்றபடி முத்தமிட்டாள். இருவரும் மாறி மாறி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆப்பரேசன் தியேட்டரிலிருந்து பானுவின் அலறல் சத்தம் மீண்டும் கேட்டது.
ஒரு நர்ஸ் அங்கிருந்து டாக்டர் அறைக்கு வேகமாக பதறி அடித்தபடி வேர்க்க விறுவிறுக்க ஓடினாள்.
மின்னல் வேகத்தில் புனிதா டாக்டரும் அவரோடு இன்னும் சில டாக்டர்களும் ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.
என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
99528 27529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment