சுட சுட செய்திகள்

Wednesday, November 25, 2009

திசை திருப்பும் கல்வி வேண்டாம்







சொன்னதைத் திருப்பிச் சொல்கிற கல்வியும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கிற வீட்டுப்பாடமும், வரிகள் பிறழாமல் அப்படியே எழுதுகிற தேர்வும், நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆட்டம் காண்கின்றன. கடைவீதிகளில் கிடைக்கிற வழிகாட்டி நூல்களும், தினசரி நடக்கும் தனிவகுப்புகளும், திரும்பத் திரும்ப மூளையில் விஷயங்களைத் திணிக்கிற திருப்புதல் தேர்வுகளும் உண்மையான கல்வியிலிருந்து நம்மை திசை திருப்பி விடுகின்றன.




குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பப்படும் போதே மிரட்டலுடன் அனுப்பப்படுகின்றனர். கல்வி, பாரமாக அவர்கள் மீது கவிழ்கிறது. கற்றல் என்பது மகிழ்வுடனும், நிறைவுடனும் நடக்க வேண்டிய பேரனுபவமாகவும், உள்ளுக்குள் நடக்கும் இனிய பரிமாற்றமாகவும் இருக்க வேண்டும்.




இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற உந்துதலையும், தீவிரமான அர்ப்பணிப்பையும் உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும். புதிய முன்னேற்றங்களையும், அதுகுறித்து கூடுதலான விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை மாணவர்களுக்கும் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.




இன்றைய கல்வி முறையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பாட திட்டங்களில் உள்ளவாறு, சாமானிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் புகுத்த வேண்டும். மேல்மட்ட பாடத்திட்டங்கள் என்று சொல்லப்படுகிற சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் கல்வித் திட்டத்தில், ஐந்தாவது படிக்கும் மாணவன், அரசு பள்ளியில் 12வது படிக்கும் மாணவனின் அறிவை பெற்று விடுகிறான். அப்படியென்றால், தற்போதிருக்கும் அரசின் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளது என்று பாருங்கள்.




நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாடத்திட்டங்களை, சரிவர பயிற்றுவிப்பதற்கு முயற்சி எடுப்பரா என்ற வருத்தம் ஒருபுறம் எழத்தான் செய்கிறது என்றாலும், அதற்கான புதிய யுக்திகளை அரசாங்கமே, கல்வியியல் அறிஞர்களை வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுக்க வேண்டும்.




புதிய பாடத்திட்டத்தில், சட்டம் சார்ந்த விழிப்புணர்வும், நவீன அறிவியல், முக்கிய வரலாறுகள், எளிய ஆங்கிலம், எளிய மற்றும் தேவையான கணிதம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த பாடங்கள் புகுத்தப்பட்டால், மாணவர்களுக்கு பாடங்கள் சுமையாக இல்லாமல் அமையும்.