சுட சுட செய்திகள்

Monday, January 5, 2009

நான் யார்...?

நான்...மாடமாளிகை..கூட கோபுரங்களை பிரதிபலிப்பவன் இல்லை.நான் எந்த மக்களில் இருந்து தோன்றினேனோ...அந்த மக்களைத் தான் பிரதிபலிக்கிறேன்...உச்சத்திலும், உயரத்திலும் பறப்பதல்ல என் நோக்கம்..சமூக இருட்டின் கடைக் கோடி விளிம்பில் இருந்து கிளம்பும் முனகலில் இருந்து துவங்குகிறது என் வாழ் நாளுக்கான சிந்தனை....என்னை நீங்கள் எங்கும் சந்திக்கலாம்....இந்நேரம்...உங்கள் சாலைகளின் முடுக்குகளில்....உங்களின் ஏதேனும் ஒரு காரணத்திற்காக...வியர்வை வடிய ,கழுத்து நரம்பு புடைக்க போராடும் தோழர்களுக்கு நடுவில் நானும் காணக் கிடைப்பேன்...என்னால் கணிணி திரைக்கு முன்னால் மட்டும் கருத்தும்,கொள்கையும் பேச இயலாது.வாருங்கள் கவிஞர்களே...வீதிக்கு போவோம் என அழைத்த அறிவுமதியின் தம்பி நான்...வாழ்வின் தங்கச் சிறகுகளில்உல்லாச உலகை சுற்றிப்பார்க்கபடைக்கப் பட்டவன் நானில்லைஎன்பதை மீண்டும் மீண்டும்எனக்குள் அழுந்திக் கூறிக் கொள்கிறேன்...என் கூட்டம் பெரிது.அழுக்கும்,வேர்வையும், சாதியும் ,சேரியும் என இழிக்குழிக்குள் சிக்கிக் கொண்டுள்ள என் கூட்டம் பெரிது...திருவிழாவில் பழம் விற்றவளின் பேரன்...ஒரே தலைமுறைக்குள் கணிணியில் இணையம் இசைக்க முடிந்ததைஎன்னால் அதிசயம் என ஆனந்தப் பட முடியாது....நான் மட்டுமல்ல சமூகம்...இன்னும் சாக்கடைக் குழிக்குள் மலம் அள்ளும் உறவுகள் எனக்குண்டு......என்னால் உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என கீதம் இசைக்க முடியாது....நானும் இவ்வுலகின் பிறரை போல வாழ முயல்கிறேன்...ஆனால்.... என் கால் இடுக்கில் ஊர்கிறது எம் மக்களின் நூற்றாண்டு கண்ணீர்...அதன்ஈரத்தின் சுவட்டினால் என் இரவுகள் கூட இன்னும் உறங்கா விழிகளோடு...