சுட சுட செய்திகள்

Friday, December 23, 2011

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (2) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (2)

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் துவங்கும் மலைப் பயணம், மலையின் மேல் கோவில் கொண்டிருக்கும் சுந்தரமகாலிங்கர் சந்நிதியையும் தாண்டி மலையின் நீள அகலங்களில் பயணிக்கிறது.உடலில் வலுவும், உள்ளத்தில் உறுதியும் இருக்கும் எவரும் இன்று மலையில் எளிதாக சென்று வரலாம்.அதற்கான வசதி, வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் மனித சஞ்சாரமே இல்லாத அடர்த்தியான காடுகளைக் கொண்ட இந்த மலையில்,பழக்கமில்லாதவர்கள் வழி தவறி தொலைந்து போய்விடும் அபாயம் இருந்திருக்கும். அதனைத் தவிர்க்கவே இம்மாதிரியான வழிக் குறிப்புகள் அருளப் பட்டிருக்க வேண்டும்.கோரக்கர் தனது சீடர்களுக்காகவும் அவர் வழி வந்தவர்களை மனதிற் கொண்டு இவற்றை அருளியிருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

அத்தரி மகரிஷி ஆசிரம் வந்துவிட்ட நாம்  கோரக்கரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மேலேறுவோம்.ஆசிரமத்திலிருந்து கிழக்காக இருக்கும் பாதையில் மேலேறி அரை நாளிகை நடந்தால் கோணவாசல் பாதை வரும், அதைத் தாண்டி மேடேறிப் போனால் பசுமிதிப் பாறையும், அந்தப் பாறைக்குக் கிழக்கே கணபதியின் உருவத்தை ஒத்த ஒரு பாறை இருக்குமாம்.அதை வணங்கி அதன் கிழக்குப் பக்கம் செல்லும் பாதையில் அரை நாளிகை நடந்தால் பாதையின் தெற்குப் பக்கத்தில் அம்பு விழும் தூரத்தில் அருட்சித்தர் மச்சமுனியின் ஆசிரமம் இருக்கிறது என்கிறார்.

மச்ச முனிவரின் ஆசிரமத்தின் தெற்குப் பக்கமாய் நடந்தால் கூப்பிடு தூரத்தில் வெள்ளை புனல் முருங்கை மரம் எதிர்படுமாம்,அதன் இடதுபக்கம் அம்புவிடும் தூரத்தில் சமதளமான பாறையை காணலாம்.அந்த பாறையின் தெற்குப் பக்கம் இருக்கும் ஓடையை தாண்டினால் அம்புவிடும் தூரத்தில் காவி தெரியும்,அதற்கு கீழ்பக்கம் பேய்ச்சுரை கொடி படந்திருக்கும் என்கிறார். இந்த கொடிக்கு தெற்குப் பக்கம் இருக்கும் பாதையில் நடந்தால் குருவரி கற்றாழை எதிர்படுமாம்,அதற்கு நேர் வடக்காய் சென்றால் கூப்பிடு தூரத்தில் கிழக்கே ஒரு பாதை தென்படும்,அதிலிருக்கும் மேட்டில் ஏறினால் சமதளமாக இருக்கும் என்கிறார்.அதில் அரை நாளிகை தூரம் நடந்து வநது தெற்குப் பக்கமாய் பார்த்தால் தனது ஆசிரமம் தெரியும் என்கிறார் கோரக்கர்.

கோரக்கர் தனது ஆசிரமத்தில் வசித்திருக்கவில்லை என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். ஆசிரமத்தின் நேர் வடக்கில் இருக்கும் ஆற்றில் இறங்கி தெற்குப் பக்கம் பார்த்தால் மலைச் சரிவில் தனது குகையை பார்க்கலாம் என்கிறார்.அதன் கிழக்கே ஆற்றின் நடுவில் கஞ்சா கடைந்த குண்டா இருக்கும் என்றும்,அதன் கிழக்கே வற்றாத பொய்கை ஒன்று இருக்குமாம்.எத்தனை ஆச்சர்யமான வழிகாட்டல்!!

இதுவரையிலான பயணத்தில் நமக்கு தெரிவது, அத்திரி மகரிஷி, மச்சமுனி,கோரக்கர் போன்ற பல சித்த பெருமக்கள் தங்களுக்கென தனித்தனியான அமைப்புகளை கொண்டிருந்திருக்கின்றனர்.இந்த ஆசிரமங்களில் அவர்களுடன் சீடர்கள் உடனிருந்திருக்க வேண்டும்.இவர்கள் அனைவரும் சமகாலத்தவர்களா அல்லது அவர்களின் வழி வந்தவர்கள் அந்தந்த ஆசிரமங்களை நிருவகித்து வந்தனரா என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது.

கூப்பிடு தூரம், அம்புவிழும் தூரம், நாளிகை நடைபயணம் என்பதான தூர அளவைகள், திசைகள், ஆங்காங்கே இருக்கும் பாறைகள்,சுனைகள்,ஆறுகள்,ஓடைகள் என்பதான அடையாளங்களை வைத்துக் கொண்டு நகரும் இந்த பயணத்தில் மேலும் சில சுவாரசியங்கள் காத்திருக்கின்றது.

No comments: