சுட சுட செய்திகள்

Sunday, July 17, 2011

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


உயிரைக் காட்டிலும் மானம் பெரிது.

வாழ்ந்தால் மானத்தோடு வாழவேண்டும்? மானத்துக்குக் கேடு வந்தால் உயிர் வாழாமை நன்று.

இதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும்.

சரி, மானம் என்றால்? மானம் என்றால் மானம்தான் என்று கூறிவிடுதல் சரியாகாது.

நம் ஒழுக்கத்துக்கும், கல்விக்கும் அறிவுக்கும் ஏற்றபடி சமூகத்தவர் நம்மை நடத்த வேண்டும். வயதுக்கும் மரியாதை வேண்டும்.

இதற்குரிய மரியாதை கிடைக்காதபோது மானம் கெடுகிறது.

முக்கியமானவர் என்று கருதி அவர் இல்லத் திருமணத்துக்குப் போகிறோம். சரியான மதிப்பு கிடைக்கவில்லையென்றால் மனம் வருந்துகிறது. இதையும் அவமானம் என்றே சொல்கிறோம்.

ஏன்? ஒரு கடைக்குச் சாமான் வாங்கப் போகிறோம். கடைக்காரர் ‘ வாங்க சார்’ என்று வரவேற்கிறபோது மனம் மகிழ்வடைகிறது. நம்மைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது ‘ வேறு கடைக்குப் போகலாமே ‘ என்று எண்ணுகிறோம். இயல்புதானே?

மானம் என்பது நம்மைப் பிறர் மதிக்கும் மதிப்பில் உயர்வதும் மதிப்பின்னமையில் தாழ்வதும் ஆகும்.

புறநானூறு பேசுகிறது மானம் பற்றி,

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னன், சோழன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னனோடு போர் செய்து சிறைப்பட்டு குடவாயில் என்னும் ஊரில் சிறை வைக்கப்பட்டான். நீர் வேட்கையால் அவதியுற்றபோது, காவலன் சற்றே காலம் தாழ்த்தி நீர் கொண்டுவந்து தந்தான். கொண்டு வந்து தந்த தண்ணீரைப் பருகாது உயிர்விட்டான் மன்னன்.

ஒரு மன்னனுக்குரிய மரியாதை வழங்கப் படாதபோது, மானம் அழிந்தது. மனம் பொறுக்காத மன்னன் மாண்டான். இறக்கும்போது அவன் எழுதிய பாடலில்,

”குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார்” என்கிறான்.

குழந்தை இறந்து பிறந்தாலும் உருவ மில்லாத சதைப்பிண்டமே. பிறந்தாலும் வாளால் கீறியே அதனைப் புதைப்பார்கள். அப்படியுருக்க, நான் போரில் சாகாமல் இவ்வாறு சிறையில் வாடியதால் அல்லவா சிறைக்காவலன் கூட என்னை மதிக்கவில்லை என்பது அவன் மனவருத்தம்.

மன்னனுக்குரிய மரியாதை இல்லையென்றால் அவமானமாகிறது.

அலெக்சாண்டர், தன்முன் போர்க் கைதியாக நின்ற புருஷோத்தமனிடம், ‘ உனக்கு என்ன வேண்டும்? ‘ என்று கேட்டபோது, ‘என்னை மன்னனுக்கு உரிய மரியாதையோடு நடத்த வேண்டும்’ என்று கேட்டவனை மதித்துப் போற்றினான்.

பிறர் மானத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. மானம் இல்லாதவனை, ‘ தலையின் இழிந்த மயிர் அனையர்’ என்கிறது திருக்குறள்.

தலையில் இருக்கும் போது மயிருக்கு வளர்ச்சி உண்டு. தலையிலிருந்து கீழே விழுந்துவிட்டால் வளர்ச்சியில்லை. மானம் கருதாதவன் வாழ்வில் வளர்ச்சி கிடையாது.

ஏழை ஒருவன் தன்னோடு பள்ளியில் படித்த நண்பனின் மகள் திருமணத்துக்குச் சென்றான். வெளியில் நின்றவர்கள் இவனுடைய எளிய உடையில் சென்றான். வெளியில் நின்றவர்கள் இவனுடைய எளிய கோலம் கண்டு உள்ளேவிட மறுத்து வெளியில் அனுப்பிவிட்டார்கள்.

ஏழையின் மனம் வாடியது; பின் சினங் கொண்டது. கடையில் வாடகைக்கு ஒரு சரிகைக்குல்லா வாங்கித் தலையில் அணிந்து சென்றான். மரியாதேயோடு அழைத்துச் சென்றனர். சாப்பிட அமர்ந்தான். பரிமாற வந்தவர்களிடம், எதையும் இலையில் வைக்கவிடாமல் எல்லாவற்றையும் சரிகைக் குல்லாவில் வாங்கிக் கொண்டான். எல்லோரும் இந்தக் காட்சியை ஆர்வமாகப் பார்த்தனர், வீட்டுக்கார நணபர் வந்தார்.

”ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டார்.

” குல்லாவுக்குத்தான் இன்று சாப்பாடு, குல்லாவே நல்லா சாப்பிடு. எனக்காகவா, என்னை உள்ளே விட்டார்கள்? உனக்காகத் தானே என்னை அனுமதித்திருக்கிறார்கள். முடிஞ்ச வரைக்கும் சாப்பிடு” என்று குல்லாவிடம் பேசினான்.

வீட்டுக்கார நண்பன் வெட்கப்பட்டான். எல்லோரும் இதன் மூலம் பாடம் பெற்றனர்.

மானம் இழிக்கப்படும்போது நல்லுணர்வுடைய மனிதன் பொறுக்க மாட்டான்.

அதிலும் ஏழையாக இருப்பவர்கள் தங்கள் மானத்தைக் காக்கப் பெரிதும் கவனமாய் இருந்தாக வேண்டும்.

திருமணம் முதலிய விழாக்களுக்குச் செல்லும்போது நன்றாக உடுத்திக்கொண்டு செல்ல வெண்டும். வசதியானவர்கள் கைத்தறிப் புடவையில் வந்தால் ‘ எவ்வளவு எளிமை!’ என்று புகழ்வார்கள். ஏழை என்றால் எளிய உடையில் செல்லும்போது. ‘ இவனெல்லாம் கல்யாணத்துக்கு வரலேன்னு யார் கேக்கப் போறாங்க. நல்ல சட்டை கூட இல்லே. பேசாம வீட்டிலயே கிடக்க வேண்டியதுதானே?” எனபார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுறுக்கத்து வேண்டும் உயர்வு.

என்பது வள்ளுவர் வாக்கு.

‘ஏழைசொல் அம்பலம் ஏறாது’, என்று பழமொழி உண்டு. பொது மன்றங்களில எளியவர்கள் பேசாமல் இருப்பதும் நல்லதே.

தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்று திருவள்ளுவர் கூறுவதன் உட்பொருள், ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தலுள்ளோர் மதித்துப் போற்றும் நிலை இருந்தால் – அதற்கேற்ற புகழை, தான் பெற்றிருந்தால் – அங்கு செல்ல வேண்டும். இல்லையேல் அங்கு போகாமல் இருப்பதே நல்லது என்பதுதான்.

‘ ஒக்காந்தா எழுந்திருக்க மாட்டாருய்யா அவரு’, என்று சிலரைப் பற்றிக் கூறுவதுண்டு. ஓர் அவையில் தனக்குள்ள இடம் எது? என்பதறிந்து, அந்த இடத்தில் அமர்வார் என்று அர்த்தம்.

மேடையில், ஒரு துணைப் பேச்சாளராகச் செல்லுபவர், முன்வரிசை நாற்காலியில் அமர்ந்தால் என்னவாகும்? முதன்மைப் பேச்சாளர் வந்ததும் இவரை எழுந்து பின்னே போகச் சொல்லுவார்கள். இதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? எனவே, அமரும் போதே உரிய இடத்தில் அமர்ந்து விட வேண்டும். அதுதான், ‘ உட்கார்ந்தால் எழுந்திருக்காத இடம்’.

‘ படுத்தா எழுந்திருக்க மாட்டா என் மருமவ’ என்றாளாம் ஒரு மாமியார்.

‘நீ கொடுத்து வச்சவதான்’ என்றாளாம் கேட்டுக் கொண்டிருந்தவள்.

இரவு எல்லாப் பணிகளையும் செய்து முடித்துவிட்டுப் படுக்கிறாள். நினைத்து நினைத்து எழுந்து எழுந்து சென்று ஒவ்வொன்றாகச் செய்யாத அறிவுள்ள மருமகள் என்பது தெளிவாகிறது.

கொல்லைக் கதவைத் தாழ் போடாமல் படுத்துவிட்டால், மாமியார் ‘ தாழ் போட்டுட்டியா?’ என்று கேட்டு எழுப்புவாள். எழுப்புகிறாரே மாமியார் ஒர் வார்த்தே கூடத் தன்னைப் பற்றித் தவறாகச் சொல்லிவிடக் கூடாது எனக் கருதும் மானமுள்ள மருமகள் தன் பணியைச் செவ்வனே செய்து முடித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றால் பிரச்னை வரவே இடமில்லையே.

வயது வந்த மகன், தந்தையார் ஏதாவது அறிவுரை சொன்னால், அதைத் தொண தொணப் பாகக் கருதுகிறான்.

தன் நண்பர்கள் முன்னிலையில் தந்தை அறிவுறுத்தினால் போய்விட்டது மானமென்று தாண்டிக் குதிக்கிறான்.

நண்பர்களோடு வெளியூர் செல்லத் தந்தையிடம் பணம் வாங்கிக்கொண்டு விடையும் பெற்றுக்கொண்டு செல்லவரும் போது, பணம் கொடுக்கும் தந்தை – கஷ்டப்பட்டுத் தேடிய பணத்தைத் தந்தனுப்பும்போது – அதைக் கவனமாக வைத்துக் கொள்ளுமாறு ஒன்றுக்கு இரண்டு முறையாகச் சொன்னால் தவறில்லையே.

” இப்போது பஸ்ஸீக்கு வேண்டியதை மட்டும் சட்டைப் பையில் வச்சுக்கோ. சில்லரைக்காசும் வச்சிருக்கியா? கண்டக்டரிடம் பாக்கி வாங்க மறந்துட்டு இறங்கிடுவே. பணம் முழ்க்க ஒரே இடத்திலே வச்சுக்காதே. நாலு இடத்தில் வச்சுக்காதே. நாலு இடத்தில பிரிச்சு பிரிச்சு வச்சிக்கோ, ஒன்னு போனாலும் ஒன்னு இருக்கும். ஊர் வந்து சேந்திடலாம். இல்லேன்னா பிச்சைதான் எடுக்கணும். ஆத்துல குளத்துல இறங்காத. ரயில்ல டிக்கெட் வாங் ஒருத்தர் போனா, மத்தவங்க பையையெல்லாம் பாத்துகிட்டு இருக்கசும். ஒவ்வொரு நாளும் கடுதாசு போடு”.

அனுபவம் பேசுகிறது. அதை செவிமடுத்து அதன்படி நடப்பதே நல்ல மகனுக்கு அடையாளம். அவ்வாறின்றி . ‘ பெரிசு உளறுது. பெரிய பணம் குடுக்கறாரு ! இதைக் தொலைச் சிடப் போறாமாக்கும்! சரி ஆளை விடுய்யா, ஒன்னோட அறிவுரையைக் கேட்டுக் கேட்டே காது தேஞ்சி போச்சு’, இவ்வாறு நினைத்தபடி அப்பாவின் அனுபவப் பிழிவை காதில் வாங்காத்து மட்டுமின்றி, போகும்போது தன் நண்பர்களிடம் ‘ இவருகிட்ட பணம் வாங்கி கிட்டுவர்றதுக்குள்ளே நம்ப மானமே போயிடுதுடா!’ என்று கூறுவது எது மானம்? என்று அறிந்து கொள்ளாத அறியாமையைக் காட்டுவது ஆகும்.

இந்த இளைஞன் தந்தையிடம் பணம் கேட்க்க் கூடாது. நாமே சம்பாதித்து நம் செலவைச் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணி, கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் ஏற்றுச் செய்வானானால் அதுதான் மானம்.

அதைவிடுத்து அப்பாவின் பணம் வேண்டும். ஆனால் அறிவுரை மட்டும் சொல்லக்கூடாது என்று நினைப்பது, மானத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதாக ஆகும்.

தந்தைக்கு சுயமாகச் சம்பாதித்துப் பணம் கொடுத்துக் காப்பாற்ற வேண்டிய அந்தத் துடிக்கும் இளமை கொண்ட இளைஞன், தந்தையிடம் பணம் கேட்டுப் பெறும் இழிநிலைக்காகத் தலைகுனிந்தால், அது மானம். இந்தப் பணத்தையெல்லாம் நாளை உழைத்துப் பொருளீட்டி ஒன்றுக்குப் பத்தாகத் தருவேன் என்ற உறுதிகொண்டால் அது தெளிவு.

மானத்தைக் கருதக்கூடாத இடமும் உண்டு. அது எது? மானத்தைப் பெருமையாகப் பேசும் திருவள்ளுவர் ஓர் இடத்தில் மானம் பார்க்காதே என்கிறார். தன் குடியை உயரச் செய்து சமுதாயத்தில் ஒப்பற் குடியாக ஆக்குவேன் என்று சபதம் செய்து, அதற்காக உழைப்பவன் மானத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை என்கிறார்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.

இதன்மூலப் குடும்பத்தை உயர்த்த முனைந்தவன், காலம் பார்க்காமல் சோம்பல் இல்லாமல் மானம் கருதாமல் உழைக்க வேண்டும் என்கிறார்.

இதிலே இழிவு எதுவும் இல்லை. ஏனெனில், அவன் மனக்கண்ணில் எதிர் காலத்தில் காரில் போகப் போவதும் மாடி வீட்டில் வாழ்வதும் தெரிகிறது. சாணம் அள்ளும் வேலைகூட இனிக்கிறது தவிட்டு மூட்டைகூட தங்கமாகப் போவது என்பதால் கனமாகத் தெரிவதில்லை. குடும்பத்தை உயர்த்தும்போது மானம் கருதாமல் உழைப்பதே அவமானமின்றி வாழும் அரிய வழியாகும்.

No comments: