சுட சுட செய்திகள்

Sunday, July 17, 2011

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...

thannambikkai

எல்லாம் தெரிஞ்ச, ஏகாம்பரம் என்று ஒருவர் இருந்தார். தனக்கு எல்லாமே தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வார். ஊரில் உள்ளோர் அவருக்கு எல்லாமே தெரியும் என்று நம்பினர்.

அந்தப் பகுதியிலேயே பனைமரம் கிடையாது. எங்கிருந்தோ, எப்படியோ, யாரோ ஒரு பனம்பழத்தைத் தெருவில் போட்டு வைத்திருந்தார். யாரோ ஒருவர் கண்ணில் பனம்பழம் பட்டுவிட்டது. அவருக்கு அது ஒரு வினோதப் பொருளாகத் தெரிந்தது. ஊரே கூடிவிட்டது. யாருக்கும் அது என்னவென்று தெரியவில்லை.

எல்லோரும் ஏகோபித்த முடிவுக்கு வந்தனர். எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்திடம் செல்வதென்று! சென்றனர். காட்டினர். அவருக்கு மட்டும் பனம்பழம் எப்படி அறிமுகமாகியிருக்கும்? ஏகாம்பரம் அகராதியில்தான் தெரியாது என்ற சொல்லே இல்லையே! வந்திருக்கும் அனைவருக்குமே இது பற்றித் தெரியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அப்போதுதானே எது வேண்டுமானாலும் சொல்லலாம்! அது என்ன என்பதை சபைக்கு உரத்த குரலில் அறிவித்தார். நம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

“இதுதான் கரடி முட்டை”

எல்லோரும் கலைந்து போகும்போது கலவரந்தோய்ந்த முகத்துடன் சென்றனர். கலவரம் இருக்காதா பின்னே? எப்போது கரடி முட்டை கிடக்கிறதோ, அப்போதே இங்கு இரவில் கரடி வருகிறதென்று உறுதியாகிறது. ஆகவே, இரவில் குழந்தைகளை வெளியில் அனுப்பக்கூடாது. நாமும் கூடுமானவரை கையில் ஆயுதமில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்று பீதியடைந்து பேசிக்கொண்டே சென்றனர்.

எல்லாம் எல்லாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒன்றில் பெரியர், ஒன்றில் சிறியர் என்றார் கவிமணி. அறிவியல் மேதை அப்துல் கலாமுக்கு பூக்களைக் கொண்டு மாலை தொடுக்கத் தெரியாமல் இருக்கலாம். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழி தெரியாமல் இருக்கலாம். இது ஒன்றும் குறையல்ல. பூமாலை கொடுக்கும் பணியை அந்தத் தொழிலாளியிடம் விடலாம். திருத்துறைப் பூண்டிக்குச் செல்லும் வழியைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் செய்யலாம்.

எனக்கு இதுவும் தெரியும். இதற்கு மேலும் தெரியும் என்று எண்ணிக்கொண்டு, திருத்துறைப் பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறைக்குப் போய் நிற்கலாமா? மாலை கட்டுவதாக பூக்களை உதிர்த்து விட்டு நாரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு நிற்கலாமா?

இன்னும் சிலரோ திருத்துறைப்பூண்டிக்குப் பதிலாக மயிலாடுதுறை சென்றதோடு இல்லாமல், மயிலாடுதுறையை இதுதான் திருத்துறைப்பூண்டி என்றும் சாதிப்பார்கள். நாரை வைத்துக்கொண்டு இதுதான் மாலை, இப்படித்தான் கட்ட வேண்டும் என்றும் தீர்த்துக் கட்டுவார்கள். இது எதைக் காட்டுகிறது? எனக்குத் தெரிந்த வேலையில் தான் நான் ஈடுபட வேண்டும். தெரியாத வேலையில் முனைந்து ‘திருதிரு’ வென விழிக்கக்கூடாது. தெரியாத்தைச் செய்ய நினைத்து, முடியாதபோது, தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாமல் தான் செய்ததே சரியென்று வாதிடுவது அதைவிடப் பெருந்தவறாகும்.

ஒரு வழக்காடு மன்றம். நான் நடுவர். கண்ணப்ப நாயனார் பற்றிய வழக்கு வாதாடுபவர் கண்ணப்பன் கண்டபடி பூசை செய்தான். கோயில் அர்ச்சகர் சிவகோசரியார் ஆகம நெறிப்படி பூசை செய்தார் என்று சொல்ல வருகிறார். ஆகம நெறிப்படி என்று சொல்லத் தெரியவில்லை. “சிவகோசரியார் எப்படி ஐயா பூசை செய்தார்?” என்று என்னிடம் கேட்க, நாம் “ஆகமவிதிப்படி” என்று கூறினேன்.

மேற்கொண்டு வளர்த்தாமல் மேலே வாதிட வேண்டிய அந்த நண்பர், “அதான், உங்களுக்குத் தெரியுதான்னு பார்த்தேன்” என்றார். “நீ என்னைத் தானா சோதிப்பாய்? உங்க அப்பாவையே சோதிப்பியே!” என்று சொன்னேன். நாணினார்.

தெரியாததைத் தெரியாது என்று ஒத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை. மறதி இருக்கலாம். கேட்டுச்சொல்ல்லாம். ஆனால், மற்றவர்களை இழிவுபடுத்துவதும், மற்றவர்களுக்கு தனக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியாமல் இருப்பது, மன்னிக்க முடியாத குற்றமென்றும் நினைத்துப் பேசக்கூடாது. தன்னைப் பற்றிப் பெருமிதம் கொள்ளலாம். பிறரை இழிவாக நினைக்க எனக்கு ஏது உரிமை?

கங்கையில் படகு செல்கிறது. ஒரு பண்டிதரை வைத்துக்கொண்டு, படகோட்டி படகைச்செலுத்துகிறார். அன்னப்பறவை நீந்துவதுபோல படகு அலுங்காமல் குலுங்காமல் செல்லும் வண்ணமாக நீரோட்டம் தெரிந்தது. காற்றின் திசை தெரிந்து அழகாகப் படகு செலுத்துகிறார். ரசித்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும்.

பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா? “என்றார்.

படகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.

“அப்படியா? வாழ்க்கையில் கால்பகுதியை வீணாக்கிவிட்டாயே! போகிறது. பாகவதமாவது தெரியுமா?” என்றார்.

“தெரியாதுங்களே”

“அடபோப்பா, வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே! தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா?”

“தெரியாதே பிரபு”

“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா?”

இவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான்.

“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

“தெரியாதேப்பா!”

“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க?”

பண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே!

படகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே!

என்னுடைய அறிவு எனக்குப் பெரிதுதான். அவருடைய அறிவு அவருக்கப் பெரிதாயிற்றே! எண்ணிப் பார்த்ததுண்டா நாம்?

யாரையும் அலட்சியம் செய்யக்கூடாது.

“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது படித்ததுதான். மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்போமே. சிங்கதின் மீது அது உறங்கும்போது ஏறி விளையாடுகிறது எலி. விழித்தெழுந்த சிங்கம் ஆர்ப்பரித்தது. “சுண்டெலி நீ என் மீது ஏறி விளையாட என்ன தைரியம்”

“மன்னிச்சுடுங்க மகாராஜா நான் எப்பவாவது உங்களுக்கு உதவுவேன்”

“உன் உதவி எனக்குத் தேவையா? அற்பப் பயலே. நான் சிங்கம் – சுண்டெலி, எனக்கெப்படி உன்னால் உதவமுடியும்? சரி, சரி ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! மன்னிக்கிறேன். ஓடிவிடு”.

மன்னிக்கும் மனோபாவம் ஒன்றுமில்லை. அன்று என்னவோ, சுண்டெலியின் அதிர்ஷ்டம் சிங்கத்துக்குப் பசிதான் இல்லையோ, அல்லது சுண்டெலி தன் பசிக்குப் போதாது நினைத்தோ தெரியவில்லை. எவ்வாறாயினும் சுண்டெலி பிழைத்து.

மற்றொரு நாள், வேடன் விரித்திருந்த வலையில் சிங்கம் அகப்பட்டுக்கொண்டது. கர்ஜித்து என்ன பயன்? காப்பாற்ற யாரும் இல்லை. அல்லது எதுவும் இல்லை. அப்போது ஓடிவந்த சுண்டெலி வலையை சிறிது சிறிதாகக் கடித்து அறுத்துவிட்டு சிங்கத்தை வெளியேற்றி வைத்தது.

சிங்கம் இப்போது உணர்கிறது. மகாராஜா “தான்” என்றும் “மகா அற்பம்” சுண்டெலி என்றும் நினைத்திருந்த சிங்கத்தின் மனோ ராஜ்யம் சிதைந்துவிட்டது. இதோ, கண் முன்னேயே, சாக இருந்த மகாராஜாவை மகா அற்பம் காப்பாற்றி இருக்கிறதே!

இப்போது சிங்கத்தின் கண்களில், சுண்டெலி பிரம்மாண்டமாகத் தெரிகிறது. பிரமாண்டமாக இருந்த தான் ஒரு சுண்டெலியாகி கைகட்டி வாய்பொத்தி நிற்பதாகத் தெரிகிறது.

இதை நிறையவே சிந்தித்துப்பார்த்த திருவள்ளுவர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – என்கிறார்.

உருவத் தோற்றத்தால் எளிமையாக எண்ணிவிடக்கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எவ்வளவு பெரியது! அதன் அதிகாரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது! அந்த சாம்ராஜ்யத்துக்கு ஒரு உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டுமானால் , அது வின்ஸ்டன் சர்ச்சில் உருவமாகத் தெரியும். வாயில் மொத்தமான சுருட்டு. கண்ணில் அலட்சியப் பார்வை. நாக்கில் எவரையும் பொருட்படுத்திப் பேசாத ஆணவம்!

அவரை எதிர்த்து நிற்பவர் யார்?

ஆசியாக் கண்டத்தின் அரை நிர்வாணப் பக்கிரி என்று ஆணவக்கார சர்ச்சிலால் அழைப்பப்பெற்றவர்.

முழங்கால்வரை வேட்டி கட்டி, மேல் உடம்புக்குச் சட்டை போடாமல் துண்டு போர்த்தியவர்.

பழங்காலக் கண்ணாடியைக் கண்ணில் அணிந்தவர். இடுப்பில் ஒரு சங்கிலி மாட்டிய கடிகாரம். ராட்டையில் நூற்றுக்கொண்டு, எவரையும் நிமிர்ந்து நோக்காதவர், பொக்கை வாய்ச் சிரிப்பு கொண்ட பொல்லாத கிழவர்.

அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. “மகாத்மா” என்றும் “காந்திஜி” என்றும் அன்போடு அழைக்கப்பெற்ற தேசந்தந்தை.

சர்ச்சிலுக்குத்துணை நிற்க, பீரங்கிப்படை, விமானப்படை, கப்பற்படை, காலாட்படை என்று ஏராள ஆயுதப் படை! காந்தியடிகளுக்குத் துணை அகிம்சையும் சத்தியமும்! சமமான எதிரிகளா? இல்லை.

சர்வவல்லமை படைத்தவரை எதிர்த்துச் சாமானியமான கிராமத்து விவசாயிக் கோலங்கொண்ட ஒல்லியான கிழவர்! சர்ச்சில் கை பிசைந்து நிற்கிறார். சுருட்டு புகையுடன் சொற்களை உச்சரிக்கிறார்.

“என்னை எதிர்த்து, பீரங்கி துப்பாக்கியோடு வந்தால் போரட்டு ஒழித்துவிடலாம். வெறுங்கையோடு நின்று கொண்டிருப்பவரோடு எப்படிப் போரிடுவது? சங்கடமாக அல்லவா இருக்கிறது?”

பீரங்கியும், துப்பாக்கியும், விமானப்படையும், கப்பற்படையும் எல்லாம் செயலற்று வீழ, வெறுங்கை மனிதர் காந்தியடிகளின் வெள்ளையரை வென்று இந்தியாவுக்கு விடுதலையை வாங்கி வழங்கிவிட்டாரே!

சுதந்திரம் வாங்கித் தந்தவர் எந்தப் பதவியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் மகாத்மா என்பதால் எந்த ஒரு பதவியையும் ஏற்காமல் இருந்தார். இப்படி நடக்கப் போவதை உய்த்துணர்ந்தோ என்னவோ, “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி வைத்துச் சென்றுள்ளார். எவரையும் அலட்சியம் செய்யாது இருப்போம்.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பதை அறிந்து அவ்வாற்றலை மதித்துப் போற்றுவோம்.

பெருமிதம் இருக்கலாம், ஆணவன் இருக்க வேண்டாம். எளிமை கண்டு இகழ வேண்டாம்.

அவரவர்க்கும் உரிய மதிப்பை அளிப்போம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

No comments: