சுட சுட செய்திகள்

Saturday, October 15, 2011

உங்கள் குழந்தை எப்படி...?

தன்னம்பிக்கைமுந்தா நேற்று சேலத்தில் மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். அது ஒரு பெண் குழந்தை; ஆறு அல்லது ஏழு  வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண்.
           என் மகள் தியானவை பார்த்த‌தும், ஆசையாக கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள். நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "அங்கிள் , உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."
          சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ அங்கிள்  கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.
          ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "அங்கிள்  நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு அங்கிள்  ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ஏழு  வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி? புரியவில்லை. நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?
            பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.
அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை அங்கிள் " என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் பயந்து தியனாவே பயந்து போயிருந்தாள்.!
         அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது,டாக்டரும் கூடவே வெளியில் வந்தார். டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.
உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.
பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். எங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?  உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.
அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?
இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம்.
ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று.
அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) அம்மாவுடன் சேர்ந்து கொண்டு சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.
உண்மை தான். சில குழந்தைகளின் பிடிவாத குணங்கள் , ஓவர் ஆக்டிங் இவையெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு எரிச்சலை உண்டு பண்ணி விடும். இனி அந்த குழந்தைகளை பார்க்க கூட கூடாது என முடிவே கட்டி விடுவார்கள். அந்த குழந்தைகளை ஒரு சாத்து சாதி விடலாமா என்று கூட தோன்றும்.
என்ன சார் குழந்தை தான...அப்படித்தான் இருக்கும் , அதுக்காக கோபப்படலாமா..? என்று உங்கள் மனதில் இப்போது கேள்வி ஒன்று எழும். உண்மையை சொல்லுங்கள் .. உங்கள் குழந்தையை மற்றவர்கள் விரும்பும் வகையில் உருவாக ஆசையா? இல்லை குழந்தையை கண்டாலே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி மற்றவர்கள்  ஓடக்கூடிய சூழ்நிலையை உருவாக ஆசையா?
உங்கள் குழந்தை யின் குறும்பு  உங்களை ரசிக்க வைக்கும்...ஆனால் மற்றவர்களை..? யோசித்து பாருங்கள்.
அந்த குழந்தைகள் அப்படி வளர்வதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறார்கள். சில வீடுகளில் மிகுந்த  செல்லம் கொடுத்து கொடுத்தே தன குழந்தைகளை தாமே கெடுத்து வைத்திருப்பதை நீங்களும் பார்த்திருக்கலாம்.
எனவே..அதற்கான நல்ல விசயங்களை குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். பெரியவர்களிடம் எப்படி பேசுவது. ? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வது? மரியாதை என்றால் என்ன? மற்றவர்களை புண் படுத்தாமல் இருப்பது எப்படி, ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது. போன்ற அடிப்படை விசயங்களை இப்போது கத்துக் கொடுக்காமல் எப்போது சொல்லி கொடுக்க போகிறிர்கள்? அதே சமயம்  சில நேரங்களில்   அந்த மாதிரியான குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவிட்டி என்ற நோயும் இருக்கலாம்.  அந்த குழந்தைகள் மிகவும்  பிடிவாத  குணத்தோடு இருப்பார்கள். யார் எதை சொன்னாலும் கேக்க மாட்டார்கள். எப்பொழுதும் எதையாவதை போட்டு உடைத்து கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் ஒரு குறும்பு உலகமாகவே இருப்பார்கள். அது  நல்ல விசயமில்லை. அதற்கு கண்டிப்பாக மருத்துவத்தை நாட வேண்டும்.அதனால் குழந்தைகளின் அல்லது குழந்தை சார்ந்த பெரியவர்களின் மன நிலை யில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இது மிகவும் அவசியம்.

No comments: