சுட சுட செய்திகள்

Friday, January 6, 2012

ஒரு கப் காப்பி சாப்பிடலாமா..?

                          ஒரு கப் காப்பி சாப்பிடலாமா..?

காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும்
ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும்
விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றாற் போல உழைக்கவும்
கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.இதன் காரணமாக இறுக்கமான சூழலில்
சுழன்று கொண்டிருக்கிறது உலகம்.

சக மனிதன் மீதான பரிவும். ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி,  சுயநலச்
சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது , இத்தகைய இறுக்கமான சூழல்கள்
உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும்
ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து
கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம்,என எந்த ஒரு துறையை எடுத்
துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று
மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை
உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது
இந்த  மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.

மனிதனின் மன நலத்தில் மட்டுமல்ல, உடல் நலத்திலும் ஏற்படும்
பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு அரம்ப புள்ளி இந்த மன உளைச்சல்தான்.
தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு,
நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலசிக்கல்....பெண்களாய்
இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்....புறவியல்
ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்
பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, மற்றும்
சிந்தனைகளினால் வருவது. நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல
விதமாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக அதிக நேரம் பயணிக்க
வேண்டியிருந்தால்,  அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய
அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருப்பது. .இப்படியில்லாமல் "இந்த வேலை
எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை'
இது போன்ற எதிர்மறை சிந்தனைகள்  மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்கிறது.
சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …நம் நேர்மறை, எதிர்மறை
எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இதோடு அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள்,
ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன
அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.

என்றோ படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி , இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து
தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.
சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று
வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக
மாறியது..வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர்
திரும்ப வரும்போது,  ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான
கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி,
எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும்,  நல்ல
வேலைப்பாடுகளுடனும்,  சிலவை சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன.

பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை
தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில்
காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே
கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை
எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை
மதிப்பற்ற கோப்பைகள்.
உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவை பட்டிருக்கின்றன. .
அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும்
மன அழுத்தத்திற்கும் காரணம். என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் நம்
அனைவருக்கும் வேண்டியது காப்பி தானே தவிர , கோப்பையல்ல.

ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க
முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை
எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.இப்பொழுது,  வாழ்க்கை
என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள
பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை
வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம்
வாழ்க்கையின் தரம் மாறாது.பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால்
காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.என்று அவர் மன
அழுத்தத்தின் காரணத்தை சொல்லி முடித்தார்.

“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,தம் சிறகுகளை நம்பியே
அமர்கின்றன”ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …இன்னும் யார் யாரையோ நம்பியே
வாழ்கிறான் …தன்னைத்தவிர!. இந்த கோப்பையில் காப்பியை ஊற்றிக் கொண்டால்
காப்பி நல்ல இருக்கும் என்று கோப்பையின் மீது நம்பிக்கை கொண்டது மாதிரி.

ஆசை அவனை ஆட்டிவைக்கிறது. ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால்
இன்றைக்கு அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் பெரியவர்கள்.  மனிதன் எட்ட
வேண்டிய குறிக்கோளை தான் இவர்கள் ஆசை என்று சொல்லுகிறார்கள்.
குறிக்கோளுக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குறிக்கோள்
நேர்வழியில் நம்மை நெறிபடுத்தும். ஆசை,  குறுக்கு வழியில் செல்ல வழி
காட்டும். மன அழுத்தத்திற்கு  ஆசையும் ஒரு முக்கிய காரணம் தான்.

“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை” ஆனால்
மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத்
தொலைத்துவிடுகிறான்.எதிர்கால சொர்கத்தை நினைத்துக் கொண்டே ,  இன்றைய நாளை
நரகமாக உருவாக்கி கொள்கிறான் .
இன்றைய ஒவ்வொரு நாளையும், சுகமானதாக கருதி உழைத்தாலே போதும், எதிர்காலம்
கண்டிப்பாக சொர்கமாகத்தான் இருக்கும்.

மனம் அமைதி யாயிருக்கும் நேரத்தில் , எப்பேர்ப்பட்ட கடினமான
சூழ்நிலைகளிலும் சரியான முடிவினை எடுக்கும் தீர்க்கமான மன நிலை
சாத்தியமாகும்.
அழுத்தமில்லாத மனமே, சாதிக்கும் வன்மையை உடலுக்கு தருகிறது.
முடிவாக நான் சொல்ல வருவது இதைத்தான்... நீங்கள் இப்போது எந்த நிலையில்
இருந்தாலும் சரி..வாழ்வது சுகம் என்று எண்ணுங்கள். மனம் ஆரோக்கியமாக
இருக்கும். அதுவே உங்களை நல்வழி படுத்தும்.  இப்போது கையில் கோப்பையை
எடுங்கள். கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை
அனுபவியுங்கள்.

No comments: