சுட சுட செய்திகள்

Friday, April 13, 2012

நான் கொன்று , வாழ்வோமா ...?



இந்த உலகத்தில் அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது
கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் . ஏனெனில்
கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு
நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, என்றாலும்,
அகந்தையோடு இருக்கும் சில மனிதர்களை பார்க்கும் போது, பரிதாபமாகத்தான்
இருக்கிறது. இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் வாழும் குட்டி மனிதன் நானே
பெரியவன். நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக்
கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

தன்னம்பிக்கை என்பது வேறு;அகம்பாவம் என்பது வேறு. என்னால்தான் எல்லாமே
முடியும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில்
தோல்வியையே தரும்.இதை எல்லாம் நாம் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக்
கொண்டிருக்கிறோம்.

எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். கி.வா.ஜ.
அவர்கள் சொல்வார்கள்  ’குழம்பு குழம்பியிருக்கிறது, ரசம் தெளிவாக
இருக்கிறது."  காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது; ரசத்தில் அதுஇல்லை
என்று. (பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்றுதான்
சொல்வார்கள்) அகந்தையின் விளைவு குழப்பம்; அதன் விளவு அவசரம்;
செயல்திறன்குறைபாடு; தோல்வி! இன்னும்...இன்னும்.

நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான
காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு எல்லாம் நானே என்று
வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.

இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது.
அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம்,
அகங்காரம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய
முட்டாள் தனம்.

நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். செத்த பின்பு
நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்றும் வைத்துக் கொள்வோம். என்ன
நடக்கும்?  நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள்
செத்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், அதுவும் எல்லாம் ஒன்றிரண்டு
மாதங்கள்தான்.

பின்னர் பார்த்தால்,  அனைவரும் தத்தம் அவரவர், வேலையை செய்து
கொண்டிருப்பார்கள், அப்படிஎன்றால் ,  நாம் இல்லையென்றாலும் எல்லாம்
நடந்து கொண்டுதானே இருக்கிறது. நம்மால் செய்ய முடியாத காரியங்களையும்
ஜனங்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக்
கொண்டிருக்கிறதே, நாமில்லை யென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே
இருக்கிறது.

ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம்தான்
எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை, எல்லோரும் கேள்வி பட்டது தான்.

மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபந்யாசம்
செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன்
 காரிலும், வண்டிகளிலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர். ஒரு ஆடு
மேய்ப்பவனுக்கு புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன்,
சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான்.
தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர்
சபையில்  இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே !
உங்களில்  யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?” என்று கேட்டார்.
ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும்,
நான் போனால்  போவேன் என்று கூறினான். சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர்
விளக்கம்  அளிக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்“ என்ற
அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு
எதுவுமில்லை, இருக்கும் காலம் வரை நன்மையை செய்து மற்றவர்களை
சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வின் நிஜமான
ருசிகளை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று
அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும்
மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.

No comments: