சுட சுட செய்திகள்

Wednesday, April 18, 2012

உங்கள் குழந்தை எப்படி?



காலை 10 மணி வாக்கில், என் செல்போன் ஒலித்தது…
“உன்னால் முடியும் தம்பி தம்பி..” டக் ..
“ஹலோ…”
“சார் வணக்கம்..ஒட்டக்கூத்தன் சாருங்களா?”
“ஆமாம்மா….நீங்க?”
சார்..நான்  வாசகி..சேலத்திலே இருந்து பேசறேன்..”
 எனக்குள்ளே ஒரு பூரிப்பு ..சந்தோசத்துடன்..
“சொல்லுங்கம்மா…என்ன விசயம்..ஃ”
“சார்,போன மாசம், உங்கள் குழந்தை எப்படி? ன்னு ஒரு கட்டுரை எழுதியிருந்தீங்களே! அதுல வர்ற பொண்ணு மாதிரியே என் பையனும் செய்யறான் சார்..” கொஞ்சம் கவலை தோய்ந்த குரலோடுதான் பேசினார்.
“அடடா..அது நல்லதில்லையேம்மா..!.ம்..”
“என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான், கோபம் வந்தா,கனன் பின்னான்னு கத்தறான், போன வாரம் சும்மா உட்கார்ந்திருந்த என்  வீட்டுக்காரருடைய specs  (மூக்கு கண்ணாடி)யை புடுங்கி,தூக்கி எறிஞ்சு உடைச்சே போட்டுட்டான் சார்..ஒருவேளை இவனுக்கு நீங்க சொன்ன
மாதிரி Hyper activity யா இருக்குமோ..? ”
“என்னம்மா வயசாச்சு,உங்க பையனுக்கு..? ”
“12 வது படிக்கிறான் சார்..”
தூக்கி வாரி போட்டது…
“Hyper activity ங்கிறது, ஒரு வித மூளை நரம்புக் கோளாறினால் ஏற்படும் அதிகப்படியான சுறுசுறுப்பு. (Abnormal activity). இது குழந்தையின் 2 வயதில் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் படிப்படியாக ஒரு 15 வயதுக்குள் குறைந்து, அந்த குழந்தை, சராசரி குழந்தையாக மாறிவிடும்.
உங்க பையனுக்கு, கிட்டத்தட்ட 18 வயது. அவனுக்கு Hyper activity எல்லாம் இருக்காது. Emotional activity யா இருக்கும். அவன் வெளிநடத்தைகளை கண்காணியுங்கள்.தவறு ஏதாவது தெரிந்தால், அன்பாகவும், அதே சமயம் கண்டித்தும் ஆலோசனைகளை கொடுங்கள். எல்லாம் சரி ஆயிடும்.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.
இவர் மட்டுமல்ல..இவர் போன்ற பல வாசக நண்பர்கள், இந்த Hyper activity யைப் பற்றி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளார்கள்.

இதை மருத்துவ மொழியில் ADHD – Attention deficit Hyper activity disorder என்று சொல்லுவார்கள்.
இதை நோய் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் மூளை நரம்புகளில் ஏற்படும் ஒருவித மாறுபாடான அமைப்பினால் ஏற்படும் disorder.
இன்றைக்கு 9% குழந்தைகளுக்கு ADHD இருக்கிறது. அதாவது 100 குழந்தைகளில் 9 குழந்தைகளுக்கு ADHD உள்ளது. இது பெரும்பாலும் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கே அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
இந்த குழந்தைகள் மிகவும் புத்திகூர்மையுடையவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். உதாரணமாக, சராசரி குழந்தை, பென்சிலை எடுதது எழுதும். ADHD குழந்தை, எழுதி முடித்து, பேப்பரை கிழித்து விட்டு, மீண்டும் எழுதும்.
சராசரி குழந்தை, ஒரே இடத்தில் அமர்ந்து, உணவை தட்டிலிருந்து எடுத்து சாப்பிடும்.
ஆனால் ADHD குழந்தை, தட்டை இங்கிருந்து, அங்கே நகர்த்தி ஒரு வாய் சாப்பிட்டு, அங்கிருந்து இங்கே நகர்த்தி ஒரு வாய் என்று ஓரிடத்தில் உட்காராமல்   நகர்ந்துக் கொண்டே இருக்கும்.
வகுப்பறைக்குள் இவர்களது ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும.; கொஞ்ச நேரம் கூட ஓரிடத்தில் அமைதியாக உட்கார முடியாது. யாராவது பேசிக் கொண்டிருந்தால் இடையில் புகுந்து பேசுவது, தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாமல், மற்றவருக்கு முன்பாகவே முந்திக்
கொள்வது (Frequently has difficulty waiting for his or her turn), எப்போது பார்த்தாலும் அமைதியற்று திரிவது, பகல் நேரத்தில் மட்டும் அதிகப்படியாக தூங்குவது, போன்ற மற்றவர்கள் கவலைப்படும் படியான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு, எந்த செயல் செய்து கொண்டிருந்தாலும் அதை எதற்காக செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாது என்பதுதான் மிக முக்கிய பாதிப்பே. They act on Impulse.
இது நோயின் பாதிப்பு என்று தெரியாத வரைக்கும், அந்த குழந்தையை மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள்    சரியாக வளர்க்காமல் விட்டு விட்டார்களோ என்று எண்ணக்கூடும். நான் இப்படிப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர்களை
நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அழாத குறையாக இப்படி சொல்வார்கள்.
“என் பையன் பக்கத்துவீட்டுக்கு, அந்த வீட்டு குழந்தையோடு விளையாட போனால், உடனே அந்த வீட்டு பெரியவர்கள் அவனை கையோடு திரும்பி கொண்டுவந்து விட்டுட்டு போகிற அளவுக்கு தாங்க முடியாத குறும்பனாக இருக்கிறான். மற்றவர்கள் வீடு என்றுகூட நினைக்காமல், அவர்கள் வீட்டு பொருட்களையெல்லாம் தூக்கி வீசி விளையாடுவதும், உடைப்பதுமாக இருக்கிறான். பலரும் என்னிடம் வந்து என் குழந்தையைப் பற்றி குறையாக பேசுவது எனக்கு மிகவும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது. எப்படித்தான் இவனை திருத்துவது என்றே எனக்கு தெரியவில்லை..!”

உண்மைத்தான்..
நமக்குத்தான் அவர்கள் செல்லக்குழந்தைகள். மற்றவர்களுக்கு அலல் என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.நம் குழந்தையைப் பற்றி தவறாக நினைக்கும் அவர்களிடம் நம் குழந்தைக்கு இப்படிப்பட்ட Disorder இருக்கிறது என்று சொல்லவும் முடியாது. அப்படியானால்
என்ன செய்வது..?
மற்றவர்களும் நம் குழந்தையை விரும்ப வேண்டுமென்றால், Smart kids என்று சொல்வோமே,!
அப்படிப் பட்ட குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டும். எந்த குழந்தைகளையும், சரியான வளர்ப்பின் மூலமாக உறுதியாக உருமாற்றிட முடியும்.
சத்ரபதி சிவாஜியைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முகலாய சாம்ராஜ்யத்தை தன் திடமான தைரியத்தால், பின்னோக்கி ஓட வைத்த ஒர் மகாவீரன். அவனை ஒரு வீரனாக உருவெடுக்க வைத்தது அவன் தாயின் நல்ல வளர்ப்புத்தான்.
இந்தHyper activity க்கு மருத்துவம் இருந்தாலும், பெற்றோர்களும், ஆசியர்களும் தான் அதை குணப்படுத்த, மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.
அந்த குழந்தைகளுக்கு, இன்னும் அதிக செல்லங்களை கொடுப்பதை நிறுத்தி வைத்து, நல்ல கதைகளை, பழக்கவழக்கங்களை, சொல்லித்தரலாம். மனதை அமைதிப்படுத்தும் இசையைக் கேட்க செய்யலாம்.இதையேத்தான் மருத்துவ நிபுணர்களும் சிபாரிசு செய்கிறார்கள்.
நம் குழந்தை பாராட்டும் படியான செயல்களை செய்தால் கொஞ்சுவது போல், அவன் இப்படி தொல்லை கொடுக்கும்படியான குறும்புகளை செய்தால் கண்டிப்பாக கண்டிக்கவும் வேண்டும்.
ஆனால் நாம் அப்படி இல்லை. குழந்தைகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை கொடுத்து கெடுத்து விடுகிறோம். அவன் என்ன கேட்டாலும் சரி..வாங்கி கொடுத்து விடுகிறோம்.அந்த பொருள் எவ்வளவு விலையானாலும் சரி..நம்ம செல்லக் குழந்தைக்கு நாம தான சார் எல்லாமே..அவன் சந்தோசம் தான் எங்க சந்தோசம் என்பது போல் கையில் பணமில்லை என்றாலகூட கடன் வாங்கியாவது வாங்கி கொடுத்து விடுகிறோம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சிறுவன். அவன் அடம்பிடித்தால்  ,  யானைக்கு மதம் பிடித்தது போல் இருக்கும். அவன் அம்மாவின் முடியைப் பிடித்து இழுத்து, அப்பாவின்  மூக்கிலே குத்தி, தாத்தாவை கடித்து, ஊரே காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேணடும் என்பது போல் தொழிற்சாலை சங்கு மாதிரி அழுகை (இல்லை ஊளை) இப்படி அங்கே ஒரு ரணகளமே நடக்கும். உடனே அந்த சிறுவன் எதற்காக அடம் பிடிக்கிறானோ அது உடனே கிடைத்துவிடும்.
அப்படியானால் அவன் அப்படி செய்வதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்  என்றுதானே அர்த்தம்.?
ஒருநாள் அவன் என்னையையும் விடவில்லை. என் வீட்டிற்கு வந்து, என் செல்போனை எடுத்து, கண்ணில் பட்ட நம்பர்களுக்கெல்லாம் டயல் செய்து, “என்ன நல்லா இருக்கியா..? என்ன பண்ற? சரி போன வைய்யி” என்று பேசி (தொந்திரவு செய்து), மற்றவர்களையும் என்னையும் படுத்தி எடுத்துவிட்டான். இதில் உச்சக்கட்ட விசயம் என்னவென்றால ; நான் வேலைபார்க்கும் கல்லூரி முதல்வருக்கும் (போனில் சேவ் செய்யப்பட்டிருந்தது) போனைப்  போட்டு அவரை கலாய்த்திருக்கிறான். அவர் என்னை கூப்பிட்டு, “என்னங்க ஒட்டக்கூத்தன் இப்படியா குழந்தையை விட்டு என்னை பாடாய் படுத்துவது?” என்று என்னை கடிந்து கொண்டது (கன்னாபின்னாவென்று திட்டியது) வேறு விசயம். நான் மனம் பொறுக்காமல் அந்த சிறுவனின் தந்தையிடம் சொன்னேன்.
“இப்படி பண்ணிட்டான் சார்..கொஞ்சம் கண்டிச்சு வளர்த்துங்க சார்..” என்றுதுதான் தாமதம் …
உடனே அவரும், கூடவே அவர் மனைவியும சோந்துக் கொண்டு; … “என்னது..? நீங்கதான் சார் போனை பத்திரமா வைச்சுக்கணும். நீங்க பத்திரமா வச்சிருந்தா  பையன் எடுப்பானா ? சும்மா எம்பையனையே குத்தம் சொல்றீங்க..? அவன் குழந்தை சார்…” என்று அவர் பாட்டுக்கு கத்த ஆரம்பித்து விட்டார். (ம்..க்கூம் அவருக்கு எங்கே தெரியும்..என் முதல்வரிடம் நான் வாங்கிய திட்டு..?)
இப்போது உங்களுக்கு ஒரு விசயம் புரிந்து இருக்கும்.
சரியான வளர்ப்பு முறை இல்லையென்றால் Hyper activity என்ற Disorder எல்லா குழந்தைகளுக்கும், மூளை நரம்புக் கோளாறுகள் இல்லாமலேயே வந்து விடும். கூட்டுச் சமுதாயத்தில் வாழும் நாம், அனைவரிடத்திலும் பழகுவதற்கு ஏற்ற நல்ல பழக்கவழக்கங்களை நம் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அது Hyper activity யுள்ள குழந்தையானாலும் சரி…சராசரி குழந்தையானாலும் சரி.

நான் மேற்குறிப்பிட்ட சில அறிகுறிகள் தெரிந்தால், குழந்தையை நரம்பியல் அல்லது உளவியல் நிபுரணிடம் அழைத்துச் செல்வது நல்லது. அங்கே மருத்துவர்கள் 3 முறைகளில் சிகிச்சை அளிப்பார்கள்.
1. மருந்துகள் மூலமாக,
2. அமைதிப்படுத்துதல் மூலமாக (Relaxation therapy)
3. நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தருவதன் மூலமாக (Behavioral therapy)
ஆகவே நண்பர்களே உங்கள் குடும்பத்திலோ, அல்லது நீங்கள் பார்க்கும் வேறு யாராவது குடும்பத்திலோ இதைப் போன்ற HYPER Activity  உள்ள  குழந்தை யாராவது இருந்தால் உடனே அந்த குழந்தைக்கான சிகிச்சையை மேற்கொள்ள அழைத்துச் செல்லவும்.ஏனென்றால் நல்ல குழந்தை, நமது இலட்சியம்.

No comments: