சுட சுட செய்திகள்

Wednesday, May 8, 2013

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை (3)


இந்த ரெனால்டு இருக்கிறானே! எமபாதக பைய. கிரிக்கெட் பேட்டை தூக்கிட்டான்னா சும்மா நம்ம லிட்டில் பேட்ஸ்மேன் மாதிரி சுத்தி சுத்தி அடிப்பான். எனக்;கு அவனப்பாத்தா வெக்க வெக்கமா வரும். அட நம்ம வயசுப் பைய நல்லா விளையாடுறான். ஏன் நம்மளால விளையாட முடியல ன்னு ரொம்ப வருத்தமா இருக்கும்.



சரி…நாமளும் விளையாட பழகுவோம் ன்னு முடிவுப் பண்ணி, வீட்டுல பேட் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டா,அட போடா…போய் படிக்கிற வழியைப் பாருன்னு திட்டி அனுப்பிச்சுட்டாங்க. சரி…விடு..நாமளே ஒரு பேட்டை செய்வோம் அப்படின்னு,வீட்டுக்கு பின்னாடி இருந்த விறகு கட்டை ஒண்ணை எடுத்தேன்.நல்ல நாட்டுக்கட்டை…அது எந்த மரம் ன்னு எல்லாம் எனக்கு தெரியல. அப்பத்தான் வாங்கி வைச்சுருந்த நல்ல வெட்டுக் கத்தியை கொண்டு வந்து,மரத்தை பேட் மாதிரி செஞ்சுட்டேன். அட சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப அருமையா வந்திருந்தது. அப்புறம் அது மேல ஆயில் தடவுனா சும்மா பந்து சு விங்ன்னு பறக்கும் யாரோ சொன்னாங்கன்னு வீட்டுல வைச்சுரந்த தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டரை எடுத்து நல்லா பேட்டுல தடவி, வெயில்ல காய வைச்சு,பளபளன்னு ஆக்கிட்டேன்.

அப்போல்லாம், ஞாயிற்றுக்கிழமையெல்லாம் நிறைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாட, அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு வருவாங்க. 5 ரூபாய்க்கு  பெட் மேட்ச் ன்னு வைச்சு, ஏதோ உலகக்கோப்பைக்கு விளையாடற மாதிரி ரொம்ப வெறித்தனமா விளையாடுவாங்க.

அப்போ நானும் ரெனால்டும், ஏண்டா நாமளும் நம்ம நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கிரிக்கெட் டீமை உருவாக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி,லகான் இந்தி படத்தில் வர்ற மாதிரி, ஏதோ கொஞ்சமாச்சும் கிரிக்கெட்டை பத்தி தெரிஞ்ச நண்பர்களை சேர்த்துக் கொண்டு,பு ஊ து ஊ (பரனயடரச உசiஉமநவ தரnழைச உடரடி) ன்னு பேர் வைச்சு, சும்மா அமர்களம் பண்ண தயாரானோம்.

அப்போ கத்துக்கிட்டது தான் இந்த கிரிக்கெட். முதன்முதலில் பவுலிங் பண்ண சொன்னபோது, கை சுத்த தெரியாமல்,பாலை த்ரோ பண்ணிட்டு திரிஞ்சேன். எல்லாரும் என் பவுலிங்கை பத்தி கிண்டல் பண்ண ஆரம்பிச்சவுடன் நானே வெறிக் கொண்டு,எங்க வீட்டு மொட்டை மாடியில இருக்கிற சுவற்றுல மூணு கோட்டை ஸ்டெம்பு மாதிரி வரைஞ்சு,பவுலிங் பண்ண ப்ரேக்டீஸ் எடுத்தேன்.
சும்மா சொல்லக்கூடாது. நல்லா பவுலிங் பண்ண ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் நான்தான் எங்க டீமோட ஓபனிங் பவுலர். அவுட்சிங் பவுலிங் நல்;லா வந்ததனால, சீனியர் கிளப்பின் அண்ணன்கள் கூட எனக்கு ரசிகர்களா ஆகிட்டாங்க.

ஒரு சமயம், எங்க டீமோட, போட்டி வைச்சுக்கலாமான்னு அட்டி டீம் கேப்டன் சுப்ரமணி கேட்டுக் கொண்டதுக்கிணங்க நானும் எனது டீமும் பயங்கரமா ப்ரேக்டீஸ் பண்ண ஆரம்பிச்சோம்.

யாராருக்கு என்னென்ன பொசிசன். எப்படியெல்லாம் பாலை தடுக்கணும், அடிக்கணும்ன்னு ரெனால்டு சொல்லித்தர ரொம்ப மெனக்கெட்டு கத்துக்கிட்டோம். சும்மா சொல்லக் கூடாது, நான் பண்ணுன ஆயில் பேட் பயங்கரமா செட் ஆயிருந்தது. பாலை தொட்டாலே போதும் சும்மா விய்ங்ன்னு பவுண்டரியில போய் விழுகும். கைதான் அடிக்கும்போது வைப்ரேசன்ல கிடுகிடுன்னு ஆடும். அதுக்கப்புறம் என் பேட்தான் எங்க டீமோட வேவரட் பேட்.

சுப்ரமணி டீமுல இருக்குற எல்லோருமே காட்டான்கள். ஏதோ பாலை தொடற மாதிரிதான் இருக்கும். ஆனா பறக்கும்.எல்லாம் டீ எஸ்டேட்டுல இருந்த நண்பர்கள். அவங்களோட விளையாடுறது எங்களுக்கு ஏதோ பாகிஸ்தான் கூட விளையாடுற மாதிரி.

அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. அன்னைக்குத்தான் எங்களுக்கும், அட்டி டீம்முக்கும் மேட்ச். பெட் 10 ரூபாய்.

எங்க அப்பா என்கிட்ட கேட்டார். ஏண்டா பேட்டை தூக்கிட்டு விளையாட போறேன்னு போறியே..ஜெயிட்டு வர்றியா? தோத்துட்டு வர்றியா? 

எனக்கு வந்தது பாருங்க கோபம். என்ன நினைச்சுட்டீங்க என்னைப்பத்தி. நான் தான் எங்க டீமோட நம்பிக்கை நட்சத்திரம். ஓபனிங் பவுலர். வேணும்னா நீங்க இன்னைக்கு வந்து பாருங்க. நான் எப்படி விளையாடுறேன்னு. 

சரி வர்றேன்னுட்டாரு எங்க அப்பா.

சரி நீங்க வந்துட்டீங்கண்ணா..எனக்கு ஒரு உதவி செய்யனும். முதல் இன்னிங்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் எங்களுக்கு பெப்ஸி வாங்கித்தரணும். சரியா?

பெப்ஸி ன்கிறது வேற ஒண்ணுமில்ல. அங்க இருக்குற பக்கத்துக் கடையில, ஒரு பாலித்;தீன் (ஆவின் கவர் மாதிரி சின்னதா இருக்கும்)கவர்ல பாலையும் சக்கரையும் போட்டு ப்ரிட்ஜ் வைச்சுருவாங்க. அதை வாங்கி சும்மா ஐஸ் மாதிரி சாப்பிடுவோம். காசு வெறும் 25 பைசா தான்.

மேட்ச் ஆரம்பிச்சாச்சு. நாங்க பவுலிங் எடுத்தோம். நான் தானே ஓபனிங் பவுலர். வழக்கம் போல 15 அடியை கணக்கில் எடுத்துக்கிட்டு,அங்கிருந்து ஓடி வந்தேன். அப்பா அப்படி ஓரமா உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு. ஆமாம் பாஸ் அவர் மட்டும்தான் அங்கிருந்த ஆடியன்ஸ். 

என்ன நடந்ததுனே தெரியல. முதல் பாலே புல்டாஸ் ஆகி,நேரா ஸ்டெம்பை பதம் பார்த்துருச்சி. நான் வேற யாரையும் பார்க்கல. நேரா எங்க அப்பாவைத்தான் பார்த்தேன். சிரித்தார்.

ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆமாம் பாஸ். என்னதான் இருந்தாலும்…ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை நல்ல பௌலர் என்று கேட்ட தகப்பன். அதனால.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: