சுட சுட செய்திகள்

Tuesday, May 14, 2013

பாசம்



காதலுக்கும் பாசத்துக்கும் அணுவளவு வித்தியாசம மட்டும் தான்.

காதலில்லாமல் ஒருவன் வாழ முடியும். ஆனால் பாசமில்லாமல் யார் மீதும் பாசம் வைக்காமல் வாழ்க்கையை எண்ணி பார்க்கவே முடியாது

அது ஆத்மார்த்தமான உயிரில் கலந்த அத்வைதம். உற்றார் உறவினரோடும், உடன் பிறந்த ரத்தங்களோடும், கடைநிலை காரியத்திற்கும் ஓடிவரும் உள்ளார்ந்த நண்பனோடும் இணைப்பதுதான் பாசம் என்கிற வடம்.

இது இன்றைக்கு அறுபட்டதன் விளைவாகத்தான், உறவுகள் நம்மை விட்டு வெகுதூரம் சென்று விட்டன.

பணத்தால், பகட்டால், பொறாமையால், இன்றைக்கு பலபேரும் உறவுகளை இழந்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

குடும்ப அமைப்பு சிதைந்து போய், சின்னாபின்னமாகி, சூறாவளிக் காற்றில் பறந்து போன காகிதமாய் கண்ணுக்குத்; தெரியாமல் மறைந்துதான் போய் விட்டது.

இராமன் வனவாசம் போன பிறகு தம்பி லக்குவணும், அண்ணனுடன் சுகவாழ்வை துறந்து, வன வாழ்வை துணிந்தான். இராமரின் அத்துணை சுக துக்கங்களிலும் கடைசிவரை துணை நின்றான். அண்ணன் பட்ட துயரையெல்லாம் தன் பாசக்கரங்களால் துடைத்து விட்டான்.

சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்திருக்க வேண்டிய பரதனும், மரவுடை தரித்து “எனக்கா இந்த ராஜ வாழ்ககை? அண்ணனுக்கு  முடி மாலை சூட்ட வேண்டிய மலர்கள் என் மீதா,? ஏற்றுக்கொள்ள மாட்டேன்…இராமனுக்கு மட்டும் தான் இந்த அரியணை. நான் பெற்றால் அது பாவம்” என்று அண்ணன் போன கால் தடங்களை தேடி தேடி, அவனுடன் சேர்ந்து வாழச் சென்றவன்தானே பரதன்.
இராமயணத்தில் கையேகி முதல் குகன் வரை, ஆரம்பம் முதல் முடிவு வரை பாசம் என்ற அஸ்திவாரம் நன்றாக போடப்பட்டிருக்கிறது.

அதனால்தான் குடும்ப அமைப்பு என்கிற சமுதாய முதுகெழும்பு, இந்தியாவில் மட்டும்தான் உறுதியாய் நிலைத்திருக்கிறது.

இப்போது அந்த முதுகெழும்பு பாவம, பக்கவாதம் வந்து படுத்தே கிடக்கிறது. பணம் சேர்க்கும் ஆசை வந்த காரணத்தால், மனம் விட்டு பேசுவதற்கு இங்கே உறவுகளுக்கு நேரமில்லை. உடல் நலம் விசாரிக்க தந்தையிடம் மகனுக்கு நேரமில்லை. மகனிடம் பசியை பற்றி கேட்க தாய்க்கு நேரமில்லை. 

புகுந்த வீட்டின் சௌரியங்களை அக்காவிடம் கேட்பதற்கு பொறுமையில்லை. தங்கையின் திருமணம் நாள்குறிக்க அண்ணனுக்கு கவலையில்லை.

ஏதோ ஒரு வயிற்றில் பிறந்ததற்காக மாதமோ அல்லது பண்டிகைக்கோ வந்து, சொந்தங்களை எட்டிபார்ப்பது என்பதுதான் அவசர வாழ்க்கையில் எங்கும் நிறைந்திருக்கிறது.

உறவுகள் காயப்பட்டு வெகு நாளாகிவிட்டது. குடும்ப வேர் ரணம் வந்து மெதுவாக அழுகிக் கொண்டே இருக்கிறது, என்றைக்கு வேண்டுமானாலும் மரம் பட்டு போகலாம். கெட்டும் போகலாம்.

வேரோடு சாய்ந்த பிறகு பச்சை கிளிகள் கூடுகள் கட்ட வில்லையே என்ற கவலைப்பட்டால், இது அந்த மரத்தின் பொறுப்பல்ல.

மனிதப்பிறப்பின் நோக்கமே பாசத்தின் வலிமையை அறிவதுதான்.

தன் குடும்பத்தாரிடமே அதை வெளிக்காட்டாததின் விளைவுதான் பிளவுப்பட்ட சமுதாயத்தின் அடித்தளம்.

சகோதர பாசம் சொத்துக்காய் செத்துப்போகிறது.

அண்ணன் தானே என்று தம்பியும,; தம்பிதானே என்று அண்ணனும் விட்டுக் கொடுக்க அவர்களின் இதயம் இன்றைக்கு விட்டுக்கொடுப்பதில்லை.
ஓருமுறை நபியின் பேரன்கள் உசேனும், உசைனும் சண்டை போட்டுக் கொண்டு சில நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாhர்கள். அவர்களுடைய தாயாருக்கு இது மிகவும் கவலையளித்தது,

அண்ணனை கூப்பிட்டு சொன்னார். இப்படி தம்பியிடம் பேசாமல் இருப்பது இஸ்லாமிற்கு செய்கிற துரோகம்.

குரானிலே சொல்லப்பட்டு இருக்கிறது இப்படி… “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடம் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருந்தால் அது மிகப்பெரிய குற்றம். அது தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த உசேன் சொன்னான். “தெரியும்மா…ஆனால் அதே குரான் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறது. சண்டை போட்டவர்களில் எவன் முதலில் பேசுகிறாhனோ அவனுக்கே இறைவன் அருள் முழுவதுமாகக் கிடைக்கும். என்று. அதனால் என் தம்பி முதலில் பேசி அவனுக்கே அல்லாவின் முழு அருளும் சென்று சேரட்டுமே என்று காத்திருந்தேன் அம்மா. இது தவறா?” என்றான்.

இன்னொரு கதையும் உண்;டு. ஒரு முறை கோசலையின் மடியில் இராமன் சந்தோசமாக வந்து அமர்ந்தான்.என்ன இவ்வளவு மகிழ்சிசியாக இருக்கிறாய் என்றாள் கோசலை. இன்றைக்கு நானும் தம்பி பரதனும் சொக்கட்டான் விளையாட்டு விளையாடினோம். அவன் வென்றுவிட்டான். அதனால் சந்தோசமாக இருக்கிறேன். என்றான் இராமன்.

அப்போது பரதன் அங்கே சோகமாக முகத்தில் கவலை தோய்ந்து விம்மிக் கொண்டே வந்தான்.

ஏன் என்ன சோகம் என்றாள் அதே கோசலை.

அதற்கு பரதன் சொன்னான். நானும் அண்ணன் ராமனும் இன்று சொக்கட்டான் விளையாட்டு விளையாடினோம். அண்ணன் நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்து விளையாடி தோற்றுவிட்டான். அதுதான் காரணம்.

பார்த்தீர்களா, படிக்கின்ற போதே நமக்குள்ளே ஒரு சிலிர்ப்பு. மீண்டும்ட ஜனித்ததுபோல் ஒரு உயிர்ப்பு.

இந்த சகோதர பாசத்தின் அடிநாதம்தான் இந்த இந்திய  காவியங்களான மகாபாரதத்திற்கும்,இராமயணத்திற்கும் அடித்தளம் என்பதை நினைவில் வையுங்கள்.

இந்த பாசம் மட்டும்ட இல்லையென்றால் பாரத தேர் என்றைக்கோ தடுமாறி விழுந்திருக்கும். உடனே எழுந்துக் கொள்ளுங்கள். பக்கத்தில் இருப்பவரிடம் உங்கள் அன்பைச் சொல்ல.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: