சுட சுட செய்திகள்

Thursday, March 14, 2013

தமிழர்களே….. தமிழர்களே…பிச்சைக் கேட்கிறோம்.




மாணவர் போராட்டம்,

மனதிற்கு ஒரு புது தெம்பை கொடுத்துக் கொண்டிருக்கிற போராட்டம்,

கட்சி சாயமில்லாமல் எந்த பலாபலனும் எதிர்பார்க்காமல் உணர்ச்சியாய் திரண்டிருக்கிற இளைய படை. 

கல்வி கற்கும் நேரத்திலும் களமாட இறங்கியிருக்கும் இனமான படை.

வாழ்த்துகிறேன்,

செந்தமிழன் முத்துக்குமார் எந்த நோக்கத்திற்காக, தன் பூவுடலை தீக் கொண்டு எரித்தானோ.! 

இதுவரையில் தன் மக்களை, மகன்களை துப்பாக்கி ரவைகளுக்கு தலைவன் பிரபாகரன் விட்டுக் கொடுத்தானோ..!

இதுநடந்தே தீர வேண்டும் என்று சாமனிய தமிழனும் நினைத்துக் கொண்டிருக்கும் ஈழம் இதோ உங்களால் மலரப் போகிறது.

2013 ம் ஆண்டிலிருந்த மாணவ சமுதாயம் தான், ஈழத்தை இலங்கையிலிருந்து பிரித்துக் கொடுத்தது என்கிற வரலாறு எழுதப்படவிருக்கறது.

மாணவத் தோழர்களே..!

தென்றலாய் இருந்த உங்களை மாபெரும் புயலாக, குழந்தை பாலாவின் மரண புகைப்படம் உங்களை மாற்றியிருக்கிறது.

பூவுக்குள் ஒரு பூகம்பம் புதைந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கரிக்கட்டைப் போல் வெந்தும் வேகாமலும் கிடந்த, நம் தமிழினத்தின் ஒவ்வொரு உடம்பின் மீதிருந்தும் வரும் புகையும் நம்மை மூச்சு திணர வைத்திருக்கிறது என்பதுதானே உண்மை.

ஆம்….

நடந்தது போரல்ல…இனபடுகொலை.

ஹிட்லருக்குப் பிறகு, இந்த உலகத்தில் நடந்த மாபெரும் இனபடுகொலை, இலங்கையின் ராஜபக்சே வால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

உலகத்தின் மிகவும் அறிவார்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட யூதர் களை அவன் அழித்தான்.

இப்போது அறிவை மட்டுமே வரங்களாகவும், சாபங்களாகவும் பெற்ற தமிழர்களை இவன் அழித்திருக்கிறான்.

ஒரு சின்ன துரும்பில் கூட தமிழிருக்கக் கூடாது. இலங்கை சிங்களவனுக்குத்தான். எந்த வடிவில் தமிழிருந்தாலும் சாம்பல் கூட மிஞ்சாமல் பொசுக்கிவிடுங்கள். -இதுதான் ராஜபக்சே தன் ராணுவத்திற்கு இட்டக் கட்டளை.

நடந்தது. அவன் சொன்னது எல்லாம் நடந்தது.
தமிழர்களின் நரம்புகள் உருவப்பட்டன.

பெண்களின் குறிகள் துப்பாக்கிக் கொண்டு சிதைக்கப்பட்டன.
மார்பகங்கள் கத்தியால் அறுக்கப்பட்டன.

கர்ப்பிணிகள் வயிறு கிழிக்கப்பட்டு, சிசுவின் தலையை கொய்து எறிந்தனர்.
குழந்தையின் தலையில் மூளைகள் சிதறடிக்கப்பட்டன.

இவையெல்லாம் படுகொலை இல்லை தோழர்களே...கொடுங்கொலை.

இதையெல்லாம் பார்த்தபின்னும் வெகுண்டெழ முடியாமல், கோழைகளாய் வீட்டு மூலையில் 4 ஆண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்தே கிடந்திருக்கிறோம்.

ஆனால் லயோலா மாணவர்கள் உண்டாக்கிய பொறி இன்றைக்கு காட்டுத்தீப் போல் தமிழகம் முழுக்க மளமளவென்று, பரவிக் கொண்டிருக்கிறது.


நீதிக் கேட்டு மன்னனின் கூடல் நகரையே தீயால் பொசுக்கிக் காட்டிய கண்ணகி வாழ்ந்த இனம் தமிழினம். அவள்; செய்தது போலவே இந்த நெருப்பும், நியாயம் கேட்டு, கனல்களைக் கக்கத்தான் போகிறது.


மானமுள்ள தமிழர்களே..,!

வேடிக்கைப் பார்த்து விட்டு சம்மந்தமேயில்லாமல் நழுவுவது நியாயமா,?

யாரோ கொல்லப்பட்டதற்கு, இவன் எதற்கு உண்ணாவிரதம் இருக்கிறான் என்று பசையற்ற வார்த்தைகளை உதிர்ப்பது தகுமா…?

அடிமைகளாய் வாழ்வதே தனது அடையாளமாய் ஆக்கிக் கொண்ட தமிழனாய்…..
குட்டக்குட்ட குனிந்து குனிந்து தன் முதுகெழும்பையும், உடைத்துக் கொண்ட தமிழனாய்…..
இருக்கும் நாம்…நமது இனம் சார்ந்த அடையாளங்களை மீட்டெடுப்பது என்பது வரலாறு தெரியாமல் வராது.

எனக்கென்ன என்று இருக்;கும் தமிழர்களே…!

உங்களுக்குத் தெரியுமா..?

ஒரு குழந்தை, இறந்து பிறந்தாலும் வாளால் அவன் உடம்பைக் கீறித்தான் மீண்டும் மண்ணிற்குள் புதைப்பார்களாம்…!

வீரர்களாய் இந்த மண்ணில் வாழ்ந்து, நாட்டிற்காக, தன் இனத்திற்காக எதையாவது தன் சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைத்தவன் தமிழன்.

போருக்குச் செல்லும் போது கூட, பசுக்களை, ஆடுகளை, அந்தணர்களை, கர்ப்பிணிகளை, பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை எல்லாம் விலகிப் போகச் சொல்லிவிட்டு, நேருக்கு நேராய் நிற்கும் தனக்குச் சமமான வீரர்களின் நெஞ்சுக்குத்தான் தன் வாளை குறி வைப்பான்.

மனிதாபிமானமும், மனிதநேயமும், கருவாய் உருவாகும் போதே இவன் உதிரத்தில் கலக்கப்பட்டு விடுகிறது.அன்பையும், காதலையும் அதிகமாக நேசிப்பான். அதிகம் உணர்ச்சிவசப்படுவான். 

நேர்மைக்காகவும், நீதிக்காகவும், தன் இனத்திற்காகவும், மொழிக்காகவும் உயிரைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவான்.

இப்படியிருந்தவன் தான், இன்றைக்கு காலம் போட்ட கிறுக்கு கோட்டில், நேராக நடக்கத்தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறான். யாராவது நில் என்று உரக்க சப்தம் போட்டால் பயந்து போய்விடுவான்.

வயிறை வளர்ப்பதற்காக மட்டுமே தன் மானத்தை விலை பேசுகிறான். யாருக்கு எது நடந்தாலும் என்ன என்று திரும்பி நின்று கேட்கிற தமிழன், தன் இனத்திற்காக கேள்வி கேட்பதை வீண் என்று நினைக்கிறான்.

கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் தோழர்களே…!

நம் வீட்டில் நியாமற்ற முறையில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் நாம் வாய் மூடிக் கொண்டு மவுனமாகவா இருப்போம்,?

நம் சகோதரியை யாராவது வன் கொடுமைக்கு ஆளாக்கினால் கைக்கட்டி நின்று வேடிக்கையா பார்ப்போம்,?

அங்கே கொத்துக் கொத்தாய் இறந்து கிடந்தது நம் தொப்புள் கொடி உறவுகள்.

நாம் பேசும் மொழியின் அடையாளங்களை தாங்கி நிற்கின்ற நம் சகோதர சகோதரிகள்.

அதற்காக இல்லாவிட்டாலும், ஒரு சாதாரண மனிதனாகவாவது இருந்து, மனிதநேயத்திற்காக நீங்கள் உங்கள் கண்டனத்தை தெரிவிக்கக் கூடாதா?

தயவுசெய்து இந்த கட்டுரையைப் படிக்கும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும், உடனே புறப்படுங்கள்.

உண்ணா விரத பந்தலிலே உயிரை பணயம் வைத்து,போராடி கொண்டிருக்கும் நம் மாணவத்தம்பிகளை வாழ்த்துங்கள். உங்கள் ஆதரவில் நாம் வைத்திருக்கும் போராட்டம் வெற்றி பெறும்.

உங்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இந்த பிச்சைத்தான்.







நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

எம் தலைவர் மேதகு பிரபாகரன் ஈழத்தமிழருக்கு வழி காட்டினார். அவர் இளவல் தமிழகத் தமிழருக்கு உணர்வூட்டினான். உறவுகளே உங்கள் போராட்டங்கள் எங்களுக்கு ஊட்டச்சத்து. எமது இலட்சியப்பாதையின் செங்கம்பளம். வெல்வோம் உங்கள் கரங்களை பற்றிப்பிடித்து தமிழருக்கு விரைவில் ஒரு நாடு.